ஓடிடி-க்கு சுப்ரீம் கோர்ட் போட்ட ‘Aபாச’ கடிவாளம்!

ஓடிடி-க்கு  சுப்ரீம் கோர்ட் போட்ட ‘Aபாச’ கடிவாளம்!

டிடி (OTT) மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உள்ளடக்கங்கள் சமூக மதிப்புகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் மனநிலை மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக பலர் கருதி வரும் சூழலில் சுப்ரீம் கோர்ட் ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆபாசமான உள்ளடக்கங்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கின் பின்னணி:

சமூக ஊடக தளங்கள் மற்றும் ஓடிடி (Over-The-Top) தளங்களில் ஆபாசமான மற்றும் ஒழுங்கற்ற உள்ளடக்கங்கள் பெருகி வருவதாகக் கூறி சுப்ரீம் கோர்டில் பொதுநல மனு (PIL) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவில், இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது மோசமான தாக்கம் ஏற்படுவதாகவும், இது சமூகத்தின் ஒழுக்க நெறிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.குறிப்பாக, சில ஓடிடி தளங்களில் குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் கூட இருப்பதாக மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி நடவடிக்கை:

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஒளிபரப்பப்படும் ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து “கவலை” தெரிவித்தது.நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), உல்லு, ஆல்ட் பாலாஜி உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த தளங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இது போன்ற விஷயங்களில் அவர்கள் அமைதியாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசின் வாதம்:

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஓடிடி உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் ஏற்கனவே இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த விதிகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.சில உள்ளடக்கங்கள் மிகவும் மோசமானதாகவும், இருவர் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியாத நிலையிலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனுதாரரின் கோரிக்கை:

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சமூக ஊடகங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆபாசமான உள்ளடக்கங்கள் பரவி வருவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.மேலும், ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படும் சில உள்ளடக்கங்கள் குழந்தைப் பாலியல் வன்முறை தொடர்பானதாக இருக்கலாம் என்றும் அவர் வாதிட்டார்.ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை தடை செய்யுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற உள்ளடக்கங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தேசிய உள்ளடக்க கட்டுப்பாட்டு ஆணையம் (National Content Control Authority – NCC) ஒன்றை உருவாக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் கருத்து:

நீதிமன்றம் தனது கருத்தில், இந்த விவகாரம் சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாலும், ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியது.அரசாங்கம் ஏற்கனவே சில விதிமுறைகளை வைத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் கடுமையான விதிகள் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிவித்ததை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் உள்ள ஆபாசமான உள்ளடக்கங்களுக்கு ஒரு கடிவாளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts