‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாத் துளிகள்!
பிரபல கேமராமேன் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது, “முதலில் வாய்ப்பு கொடுத்த எம்.ஆர்.பாரதிக்கு நன்றி.நான் இயக்குநர் எம்.ஆர் .பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சென்னையில் எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்” என்றார்.
படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,” இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.
படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,”இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது. அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர்.ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால் மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்” என்றார்.
படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,”இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.
திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,”சென்னை வந்த காலத்தில் இருந்து பாரதியை எனக்குத் தெரியும் .அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,”இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா?அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு.அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,”நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம்.’மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.
இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது.சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.
நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.
முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.
எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.
நடிகை இந்திரா வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுமயா தொகுத்து வழங்கினார்.


