கவர்னர் செஞ்சது ரொம்ப தப்பு- சுப்ரீம் கோர்ட் அதிரடி! – முழு விபரம்!!

கவர்னர் செஞ்சது ரொம்ப தப்பு- சுப்ரீம் கோர்ட் அதிரடி! – முழு விபரம்!!

மிழ்நாடு அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த வழக்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியது தொடர்பானது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. கவர்னரின் அதிகாரம் குறித்து இந்த தீர்ப்பு தெளிவான விளக்கங்களை அளித்துள்ளது. இதோ அதன் விபரம்.

வழக்கின் பின்னணி

தமிழ்நாடு சட்டமன்றம் 2020 முதல் 2023 வரை பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இவற்றில் பெரும்பாலானவை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் போன்ற முக்கிய விஷயங்களை உள்ளடக்கியவை. ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், அவற்றை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பாமலும், பல மாதங்களாகவும் ஆண்டுகணக்காகவும் தாமதப்படுத்தினார். இதை அடுத்து 2023 நவம்பரில் தமிழ்நாடு அரசு கவர்னர் போக்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதன் பின்னரும், கவர்னர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதலை மறுத்து, அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பினார். இதை எதிர்த்து மாநில அரசு மீண்டும் சட்டமன்றத்தில் அந்த மசோதாக்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் மீண்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வாத/பிரதிவாதங்களை பொறுமையாக கேட்ட நிலையில்  இன்று (ஏப்.8) தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு

சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக கவர்னருநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்புவது.

பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி கவர்னரிடம் சமர்ப்பித்தால், கவர்னர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பில் கவர்னருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு கவர்னருக்கு இல்லை. கவர்னர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. அந்த வகையில், ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.

கவர்னரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். கவர்னர் ர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்துகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படும்:

ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் எனவும் அறிவித்துள்ளது, சுப்ரீம் கோர்ட்டுக்குசிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. “எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது.

கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று சுப்ரீம் கோர்ட்டால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 மசோதாக்கள் பின்வருமாறு;

* 2020ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா.

* 2020ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா.

* 2023ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

* 2023ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா. ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts