உங்கள் அரசியல் அனுபவம் இத்துடன் நிறைவு பெற வாழ்த்துக்கள், அரவிந்த்By கதிர்
டியர் கெஜ்ரிவால்ஜி,
அன்புள்ள அரவிந்தே போதும். ஆனால் தமிழ் பண்பாட்டின்படி ஆங்கிலமும், இன்றைய இந்திய கலாசாரப்படி இந்தியும் கலந்து விளிக்கிறேன். இது கடித வாரம் என்று தெரிந்து கொண்டேன்.
திடீரென்று எல்லாரும் எல்லாருக்கும் லெட்டர் எழுதுகிறார்கள். நரேந்திர மோடிக்கு முன்னால் கவர்னர், முன்னாள் பிரதமருக்கு முன்னாள் ஆலோசகர், காங்கிரஸ் தலைவருக்கு முன்னாள் அமைச்சர்… என்று கடித அம்புகள் அங்குமிங்கும் பறக்கின்றன. நீங்களே கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். ஆம் ஆத்மிகளின் தலைவருக்கு ஆருமே எழுதவில்லை என்ற குறை இருக்கலாகாது என்று மனசு துடித்தது. கீபோர்டுக்கு வந்துவிட்டேன். முன்னாள் முதல்வருக்கு முன்னாள் எடிட்டர் எழுதும் கடிதம் என்று சொல்லிக் கொள்வோமாக.

பதவி ஏற்ற 49 நாளில் டெல்லி முதல்வர் பதவியை தூக்கி எறிந்தபோது நந்தவனத்து ஆண்டி என்று உங்களை கடுமையாக விமர்சனம் செய்தேன். ஆம் ஆத்மிக்கள் என் மீது பாய்ந்தார்கள். கொள்கைக்காக அதிகாரத்தை துச்சமென தூக்கிவீசிய தியாகியை புண்படுத்துவதா என்று கொந்தளித்தார்கள். ‘அன்று நான் பதவியை உதறியது தவறு’ என்று இன்று நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.
தவறை தவறென்று உணர உங்களுக்கு மூன்று மாதம் தேவைப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரு அக் வைத்திருக்கிறீர்கள். அதாவது, ‘கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கொண்டுவந்த லோக்பால் மசோதாவை சபையில் பாஸ் பண்ண முடியாமல் போனதற்காக ராஜினாமா செய்ததை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்’ என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தவறாக புரிந்து கொள்ளவில்லை, அரவிந்த். மிகவும் சரியாக புரிந்துகொண்டு, அந்த முடிவை அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். நீங்கள்தான் மக்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
மக்களுக்கு உங்கள் மீது முதலில் எப்போது கோபம் வந்த்து தெரியுமா? ராஜினாமா செய்தபோது அல்ல. டிசம்பரில் தேர்தல் நடந்து, ரிசல்ட் வெளியாகி, பிஜேபிக்கு 31 தொகுதிகள், உங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள், காங்கிரசுக்கு 8 இடங்களை மக்கள் கொடுத்தார்கள். மொத்த இடங்கள் 70ல் பாதிக்கு மேல் கிடைக்காததால் பிஜேபி ஒதுங்கிக் கொள்ள, அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தபோது, நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வந்தும், ஆட்சி அமைக்க முன்வராமல் மக்களிடம் கருத்துக் க்ணிப்பு நட்த்தினீர்கள் அல்லவா, அப்போதுதான் முதல் முறையாக அவர்கள் கடுப்பானார்கள்.
’தேர்தலை விடவும் என்ன பெரிய கருத்துக் கணிப்பு வேண்டிக் கிடக்கிறது? 28 இடங்களில் வெற்றியையும் இதர தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் அளித்தவர்கள் மடையர்களா?’ என்ற கோபம். மெஜாரிடி இடங்களை என் கட்சிக்கு அளித்தால்தான் ஆட்சி அமைப்பேன் என்று உங்களைப் போல மற்ற தலைவர்களும் சொல்லியிருந்தால், 25 ஆண்டுகளாக இந்தியாவில் பிரதமரே இருந்திருக்க மாட்டார், அரவிந்த். முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட்டுத்தா என்றால் அம்மாவுக்கு ஏன் கோபம் வராது?
அடுத்ததாக, டெல்லி சாலையில் நீங்கள் நடத்திய தேவையில்லாத தர்ணா. அனுமதி பெறாமல் ஊர்வலம் போவதே சட்டப்படி குற்றம். ஆனால், ஒரு முதலமைச்சர் போக்குவரத்து நிறைந்த சாலையில் தன் ஆதரவாளர் கூட்டம் புடைசூழ தர்ணா செய்கிறார் என்றால் அது மெகா சட்டமீறல் மட்டுமல்ல, கடைந்தெடுத்த கேலிக்கூத்து. அப்போதுதான் ‘இந்த ஆள் சரியான .நாடங்கியாக இருக்கிறானே..?’ என்று மக்கள் பேச தொடங்கினார்கள்.
இரண்டு போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரி கவர்னருக்கு எதிராக நீங்கள் போர்க்கொடி தூக்கி கர்ஜனை செய்தபோது நாடங்கியுடன் டிராமேபாஸ், டிக்டம்பாஸ், நாக்ரேபாஸ் போன்ற பட்டப்பெயர்களும் உங்களுக்கு சூட்டப்பட்டன. இந்தி தெரியாத வெளிமாநில செய்தியாளர்கள் உங்கள் கட்சியின் யோகேந்திர யாதவ் போன்ற தலைவர்களிடம் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டபோது அவர் எவ்வளவு தூரம் தர்ம சங்கடத்துக்கு ஆளானார் என்பது பார்த்தவர்களுக்குதான் தெரியும்.
ஆட்சி அமைக்கலாமா என்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய உங்களுக்கு, 49 நாளில் அதை உதறுவதற்கு முன்பும் அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை, அரவிந்த்? ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதை காரணமாக சொல்கிறீர்கள். அந்த ஒரே ஒரு வாக்குறுதிதான் நீங்கள் மக்களுக்கு அளித்தீர்களா? அரசு அலுவலகங்களில் மக்கள் ஒரு பைசா கூட செலவு செய்யவோ லஞ்சம் கொடுக்கவோ தேவையில்லாத நிலையை உருவாக்குவேன்; மனுகொடுத்த இத்தனை மணி நேரத்தில் அல்லது நாளில் அவர்கள் கேட்டது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். அதை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தீர்கள்?
வாக்குறுதியை நிறைவேற்றுவது நல்ல விஷயம். ஆனால், ஒரு அரசியல்வாதி கொடுத்த அத்தனை வாக்குறுதியையும் நிறைவேற்றியாக வேண்டும் என்றோ, நிறைவேற்றுவார் என்றோ மக்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி நம்பும் அளவுக்கு அவர்கள் பேதைகள் அல்ல. 30 வாக்குறுதி அளித்தல் 10 நிறைவேற்ருங்கள்; 10 நிறைவேற முயற்சி எடுங்கள்; 10 அப்படியே விட்டு விடுங்கள், பாதகமில்லை. ஒற்றை வாக்குறுதியை காரணம் காட்டி பிப்ரவரி 14ல் நீங்கள் ராஜினாமா செய்ததை, ’நம்மால் எதையும் உருப்படியாக செய்யமுடியாது’ என்ற பயத்தில் எடுத்த கோழைத்தனமான முடிவாகத்தான் மக்கள் பார்த்தார்கள்.
போகட்டும். அப்படி ஓட்டம் பிடித்தவர் திரும்பவும் அதே மக்களிடம்தானே சென்றிருக்க வேண்டும்? நாடாளுமன்ற தேர்தலில் வென்று மத்திய ஆட்சியை பிடித்து நாட்டின் பிரதமராக வர வேண்டும் என திடீரென்று விபரீத ஆசை உங்கள் மனதில் விசுவரூபம் எடுக்க என்ன காரணம், அரவிந்த்? 70 எம்.எல்.ஏ.க்களை கொண்ட டெல்லி சட்டசபையில் முதல்வராக அமர்ந்து 2 கோடி மக்களுக்கு நல்லது செய்ய முடியாத உங்களால் 545 எம்.பி.க்கள் அமரும் நாடளுமன்றத்தில் பிரதமராக உட்கார்ந்து 120 கோடி பேருக்கு நல்லது செய்யமுடியும் என உசுப்பி விட்டவர்கள் யார்? நாடளாவிய கட்சி கட்டமைப்பு, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களில்லாத ஆம் ஆத்மி சார்பில் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட முடியும் என்ற நப்பாசைக்கு நீர் ஊற்றியவர்கள் யார்?
ஐடி தொழில்நுட்ப மேதைகள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவன வழிகாட்டிகள், ஆசிரியர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள் என்று அவரவர் துறையில் புகழ் பெற்று நிம்மதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த 400க்கு மேற்பட்டவர்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, அத்தனை பேரும் டெபாசிட் மட்டுமின்றி சிறுகச் சிறுக சம்பாதித்து வைத்திருந்த பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் பறிகொடுக்க காரணமானீர்களே, ஏன் அரவிந்த்? டெல்லி தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டவர், நாடாளுமன்றத்துக்கு போகவா வேண்டாமா என்றுகேட்க மறந்தது ஏன்?
காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்டுகள், மாநில கட்சிகள் என அரசியல் கட்சிகள், தலைவர்கள் எவரையும் விட்டு வைக்காமல் கடுமையாக விமர்சனம் செய்து, உங்களைத்தவிர இந்த நாட்டில் அத்தனை அரசியல்வாதிகளும் அயோக்கியர்கள் என சித்தரிக்க முயன்றீர்களே, அதற்கு பெயர்தான் ஆணவம் என்பது உங்களுக்கு தெரியாதா? லட்சக்கணக்கானவர்கள் பணியாற்றும் ஆலைகளை தொடங்கி நடத்திவரும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் இந்த நாட்டுமக்களை சுரண்டிக் கொழுக்கும் ஊழல் பெருச்சாளிகள் என வர்ணித்து ஊழியர்கள் மனதில் குற்ற உணர்வை விதைத்தீர்களே, எந்த ஒரு குற்றச்சாட்டுக்காவது பத்திரிகை செய்தி தவிர்த்த ஆதாரம் எதையும் திரட்ட முடிந்ததா உங்களால்? தலைவர்கள் சரியில்லை, அதிகாரிகள் மோசம், சட்டங்கள் சரியில்லை, நீதிமன்றமும் விலக்கல்ல என்று ஒட்டுமொத்தமாக வசைபாடி சராசரி மக்களின் மனதில் அவநம்பிக்கையும் விரக்தியும் வேர்விட்டு வளர உரம் போட்டீர்களே, அது ஜனநாயகத்தை சாகடிக்கும் என்பது புரியாதா உங்களுக்கு?
வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட்டு முழு நேர பிரசாரம் செய்ய நேர்ந்ததால், உங்கள் மீது நம்பிக்கை வைத்து நாடெங்கும் களம் இறங்கிய 424 வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு சுற்றுப் பயணம் செல்ல உங்களால் முடியாமல் போனது. இரு தேசியகட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மியை சித்தரித்த அதன் தலைவர், ஒரு மோடியை தோற்கடிக்க உத்தர பிரதேசத்தின் முஸ்லிம் மதவாதிகளிடம் மண்டியிட்டபோது, ‘இது இந்தியா இந்துக்களுக்கா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்’ என நடத்தப்பட்ட கிசுகிசு பிரசாரத்துக்கு புத்துயிர் கிடைத்தது. உங்களை அறியாமலே கடைசிக் கட்ட தேர்தலை மதரீதியான பலப்பரீட்சையாக மாற்றி, மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மரண அடி கொடுத்தீர்கள்.
ஐஐடி படித்தவர், வருமான வரி அதிகாரியாக பணியாற்றியவர், தொண்டு நிறுவன நிர்வாகி என அறியப்பட்ட நீங்கள் காந்தியவாதி அன்னா ஹசாரே அருகில் அமர்ந்த போதுதான் உலகம் உங்களை கவனித்தது, அரவிந்த். அரசியல் கட்சி தொடங்கி அதிகாரத்தை கைப்பற்ற அந்த பெரியவரை விட்டு நீங்கள் விலகி வந்த வேளையிலும் மக்களின் அபிமானம் குறையவில்லை. ஏதோ செய்ய ஆசைப்படுகிறார், ஆதரவு அளிப்போம் என்றுதான் நினைத்தனர். அப்புறம்தான் உங்கள் குளறுபடிகள் தொடங்கின. உருப்படியான திட்டம் எதுவும் கையில் இல்லை. இன்று டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்பதேகூட, தேர்தலை சந்திக்காமலே மீண்டும் பதவியில் அமர நினைத்த உங்கள் ஆசையில் கவர்னர் மண்ணை அள்ளி போட்டதால்தான் என்பது புரிகிறது அரவிந்த்.
பதவி இறங்கும்போது சபையைகலைக்க நீங்கள் சிபாரிசு செய்தீர்கள். கவர்னர் அதை ஏற்காமல் சபையை முடக்கி வைத்தார். தேசியதேர்தலில் தோற்றபின் டெல்லி அரசியலுக்கு திரும்ப நினைத்தீர்கள். கவர்னரை சந்தித்து, சபையை கலைத்து விடாதீர்கள்; இன்னொரு முறை நான் முயன்று பார்க்கிறேன் என கேட்டீர்கள். ஆனால் காங்கிரஸ் மீண்டும் உங்களுக்கு ஆதரவு தர முடியாது என கூறிவிட்டதால், வேறு வழியின்றி அடுத்த தேர்தலை சந்திப்பதாக கூறுகிறீர்கள்.
நீங்கள் ஊழல்வாதி அல்ல என்பதை தவிர மக்களுக்கு இன்று வேறு வகையில் மரியாதை போய்விட்டது, அரவிந்த். மன்மோகன்கூட ஊழல்வாதி அல்லதான். மற்ற குறைகளுக்காக மக்கள் அவரை தண்டிக்காமலா விட்டார்கள்? அட்லீஸ்ட் அவரிடம் அடக்கம் இருந்த்து. நீங்களோ ஆனவத்தின் மொத்த உருவமாக நடமாடுகிறீர்கள். இந்த கடிதம் எழுதும் வேளையில் டெல்லி கோர்ட்டில் நீங்கள் முன்வைக்கும் வாதத்தில் அதுதான் எதிரொலிக்கிறது. நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி உங்களை ஜாமினில் விடுவிப்பதாக சொன்னபோது, ஜாமீன் பத்திரமெல்லாம் என்னால் தாக்கல் செய்ய முடியாது என்கிறீர்கள். உங்களுக்காக சட்டத்தை மாற்ற முடியுமா என நீதிபதி கேட்டதற்கு, என்னை பார்த்து மற்றவர்களும் இப்படி செய்யட்டும்; அப்போதுதான் சட்ட மரபுகள் மாறும் என்று கூறுகிறீர்கள்.
இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் மாற்ற மக்களுக்கு உரிமைஇருக்கிறது. ஆனால் அதற்கான நடைமுறைகள், விதிகள், மரபுகள் இருக்கின்றன. திகார் ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர உங்கள் சட்டங்களை மதிக்க மாட்டேன் என்று கோர்ட்டில் வாதாட நீங்கள் மகாத்மா காந்தி அல்ல;
இங்கே நடப்பது அந்நியர் ஆட்சியும் அல்ல, அரவிந்த்.
அரசியலுக்கு நல்லவர்கள் வரவேண்டும் என்ற அழைப்பை இனி யார் விடுத்தாலும் சரி, நல்லவர்கள் எதிர்த்திசை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். அதற்கான முழு பெருமையும் உங்களையே சேரும். இரண்டாவது வாய்ப்பு அரசியலில் அசாதாரணம் கிடையாது. ஆனால் உங்களை போன்றவர்களுக்கு அதை வழங்கும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளல்ல, அரவிந்த். தேர்தல் நடந்தோ, நடக்காமலோ கிரண் பெடி அங்கே முதல்வராக பதவி ஏற்கும்போது ஒருவேளை உங்களுக்கு புரியக்கூடும்.
உங்கள் அரசியல் அனுபவம் இத்துடன் நிறைவு பெற வாழ்த்துக்கள், அரவிந்த்.
(இழு தள்ளு 30 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 29.05.2014)


