சென்னையில் பள்ளி வாகனங்கள் சோதனை

சென்னையில் பள்ளி வாகனங்கள் சோதனை

சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால ஜன்னல் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அனைத்தும் இருந்தால், பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது கே.கே. நகர், நந்தனம் உள்ளிட்ட பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இது போல் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா, ஷேர் ஆட்டோ மற்றும் மேக்சிகேப் ஆகிய வாகனங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது
School-Bus-cartoon
சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவி சுருதி பள்ளி பஸ்சின் ஓட்டை வழியாக விழுந்து பலியானாள். கடந்த 25-ந்தேதி நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்ததுடன் இத்தகைய பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுத்து அதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் மொத்தம் 36,389 வேன், பஸ்கள் உள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன் கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி போக்குவரத்து துறை அதிகாரிகள் 33 குழுவாக பிரிந்து பள்ளிகளுக்கு சென்று பஸ், வேன்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் போது வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள் முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி உள்பட 16 அம்சங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்று சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் போது வாகனங்களில் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் தகுதி சான்று ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

படம் :www.ppt-backgrounds.net