90 எம். எல்.- திரைப்பட விமர்சனம்!

90 எம். எல்.- திரைப்பட விமர்சனம்!

ஆச்சரியமாக இருக்கிறது..

கொஞ்சம் ஆயாசமாகவும் இருக்கிறது..

நாட்டில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்து விடுமோ என்றொருப் பக்கம் பதட்டமான சூழல்.,

கூடவே விரைவில் வந்து விடும் என்று நம்பப்படுகிற பார்லிமெண்ட் தேர்தலில் யார் யாரோடு கூட்டணி என்பதை கவனிக்க வேண்டிய தொழில்..

இதையெல்லாம் தாண்டி இன்றைய பிழைப்புக்காக இந்த வாரம் ரிலீஸான  90 எம்.எல். சினிமா எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து எழுத வேண்டிய சூழ்நிலையை நினைத்தால் வேதனை மற்றும் வெட்கத்தையும் தாண்டி கடமையுணர்வை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் தோன்றுகிறது.

இந்த மேற்கண்ட பேராவை எழுத வேண்டிய சூழலை விவரிக்கும் முன்னர் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி .. அது கூட என்னிடம் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கேட்ட கேள்வி. அதாவது நான் ஜூ.வி. என்னும் வார இதழில் இணைந் திருந்த போது ஃபுளூ பிலிம் குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் எழுத (இது 1987 என்பதை நினைவு கொள்க) கமல், பாலுமகேந்திரா, ரோகினி மற்றும் பாலகுமாரன் போன்றோரை சந்தித்து பேசினேன்.. பேசினேன் என்ற வார்த்தை சிம்பிள்தான். அப்போது பாலகுமாரன் சொன்ன விஷயம்தான் இது:

”நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள்.. அதில் வரவேற்பறை, பெட்ரூம், பூஜையறை இத்யாதி எல்லாவற்றையும் தாண்டி கழிப்பறை என்பதையும் சேர்த்துதானே கட்டுவீர்கள்.. அப்படி கட்டி முடித்த வீட்டில் குடியேறும் நீங்கள் அதிக நேரம் எந்த அறையில் இருப்பீர்கள்? கழிப்பறையிலா? இல்லைதானே? அது போல்தான் இது போன்ற ஃபுளூபிலிம்கள் எனப் படும் பலான சினிமாக்கள் என்று சொல்லும் வரத்தும்..

ஒரு விஷயம் தெரியுமா? நம் தமிழ் சினிமா என்றில்லை.. உலக சினிமாக்களில் கூட செக்ஸ் என்ற வார்த்தை யும் பெண்(கேர்ள்) என்ற இன்னொரு வார்த்தையும்தான் அதிகமாக புழங்கிக் கொண்டு இருக்குது.. அதுதான் அதிகம் வருவாயைத் தருகிறது. அதே சமயம் என்னதான் வயிற்று உபாதை இருந்தாலும் அதிக நேரம் கழிப் பறையில் மனிதனால் இருக்க முடியாது இல்லையா?அதனால் நம் முன்னோர்கள் இது போன்ற காம விஷயங் கள் குறித்து சிற்றின்பம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.அது பலருக்கு கழிவறை சுகம்..  அதுனாலே அதை இக்னோர் பண்ணிட்டு பூஜை ரூம் அல்லது பெட்ரூம் போய் அடுத்த வேலையை பாருங்க” என்றார்

மேலும் அந்த எழுத்துச் சித்தர் சொன்னது மாதிரி இந்தகழிப்பறை என்பது ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மலம் கழிக்க மட்டுமே பயன் படுவதில்லை என்பதை உங்களால் ஒப்புக் கொள்ள முடியும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த 90 எம் எல் படத்தை பார்க்கலாம். அதிலும் ட்ரைலர், ஸ்நேக் பீக் பார்த்து விட்டு அதை விட அதிகம் எதிர்பார்த்து போனால் ஏமாந்து போவீர்கள்..

படத்தின் கதை என்னவென்றால் ஓர் அப்பார்மெண்டில் ’குடி’ இருக்க வருகிறார் ரியா (ஓவியா). வரும் போதே அதே அப்பார்ட் மெண்டில் முன்னரே வசிக்கும் நான்கு இளம் பெண்களுக்கு ஹாய் சொல்லி ரெண்டாவது நாளே நெருக்க மான நட்பு வலை விரித்து கவர்ந்து விடுகிறார்.. அதே சமயம் தம்.,பாய் ஃபிரண்ட், செக்சியான டிரஸ் , ஓப்பன் டாக் என்று வலம் வரும் ஓவியாவுடன் ஒரு நாள் கெட் டூ கெதர் நடக்கும் போது அந்த அப்பார்ட்மெண்ட் தோழிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் தங்களுக்கு உள்ள வித விதமான பிரச்சினையை சொல்ல அதை நாயகி ரீட்டா தலைமையேற்று சுமூகமாக்குகிறார் . ஆனால் அதை வழக்கமான டமில் சினிமா பாணியில் தீர்க்கிறார் என்பதுதான் எரிச்சல்.

அதே சமயம் படத்தின் மையக் கரு பெண்களின் அந்தரங்க பிரச்னைதான் என்பதால் அதை ஓப்பனாக பேசுவதை பலர் ஆட்சேபிக்கக் கூடும். அதிலும் போதைபொருளான மது மற்றும் கஞ்சாவை உபயோகித்த பின்னரே உண்மையை சொல்வதாக காட்டி இருப்பது தப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இதே தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக் கள் அல்லது இயக்குநர்கள் பல்வேறு வன்முறைக் காட்சிகளையும், குடித்து விட்டு செய்யும் அலப்பறைகளையும், ஆபாச வசனம் மற்றும் காட்சிகளை அரங்கேற்றிய போது அதை ஆட்சேபிக்காத பலரும் இந்த படத்தை தரம் தாழ்ந்தது என்று சொல்வதெல்லாம் மிகை.  இதே 90 எம் எல் ரிலீஸான நாளில் வெளியான சேரனின் படமான திருமணம் என்னும் சினிமாவில் கூட ஒரு வக்கீல் , பெண்கள் டைவோர்ஸ் ஆக முக்கிய காரணிகளில் ஒன்று செக்ஸ்’ என்று விலாவரியாகச் சொல்வதை நினைவூட்டுவது சரியாக இருக்கும் …

பெண்களுக்கான தேவை, அவர்களின் ஆசாபாசம், எதிர்பார்ப்பு அல்லது சுதந்திரம் என்று பெண்கள் நினைப்பது குறித்து பலத் தரப்பபட்ட விவாதம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஹைடெக் நகரம் என்று சொல்லும் சென்னையில் ஒரு சாதாரண டீக் கடைக்குப் போய் தோழியுடன் டீ சாப்பிடுவதே இயலாத காரியமாகத்தான் இன்றளவும் இருக்கிறது என்பதே உண்மை. இதே விஷயத்தை குறிப்பிட்டு பேசிய ஒரு பிரபல ஜர்னலிஸ்ட், “இங்கு பெண் என்பவளின் சுதந்திரத்திற்கு எல்லை இல்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அவளுக்கு கொஞ்சம் கூட சுயக் கூடாது என்று சொல்லும் சமூகம் மாறவே இல்லை. பெண் என்பவள் அரபு நாட்டினரைப் போன்று முகத்தை மூடிக் கொள்ள வேண்டியவள். ஆதிக் காலத்தில் சொன்ன அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதுடன் நவீனமயாகிவிட்ட இணையக் காலத்தில் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது அவளுக்கான பட்டியலில்.அதுதான் தங்கள் முகம் தோன்றா புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்சராக செட் செய்வது, தங்களின் படங்களை பதிவிடாமல் இருப்பது… இதுதான் குடும்பப்(!) பெண்களுக்கு அழகு என்று சொல்வதுதானே நடக்கிறது’ என்றார்..

ஆனால் மேற்படி பேராவில் சொன்ன எல்லா எல்லைகளையும் தகர்த்தெறியும் நோக்கிலேயே படத்தை கடத்திக் கொண்டு போகிறார் பெண் இயக்குநர் அனிதா உதுப்.. ஆனால் அதற்காக தேவையில்லாத லிப் லாக் கிஸ் தொடங்கி எப்போதும் போதைக்காக லாகிரி வஸ்துகளை பரப்பி கொண்டு இடையிடையே, மார்பக சைஸ், லெஸ்பியன், உடலுறவு (அதற்கு பூத் பங்களா என்றொரு கோட் வேர்ட்) என்பதை மட்டுமே மனதில் பதியும் வண்ணம் அலசி இருப்பது அவசியமா? என்றொரு சிந்தனை எழத்தான் செய்கிறது. அதற்கு பதில்தான் ஆரம்பத்தில் பாலகுமாரன் சொன்ன கழிப்பறை பிலாசபி..!

இதே படத்தை அப்படி எடுத்திருக்கலாம்.. இப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்ல நிறைய விஷயமுண்டு. ஆனால் சென்சாரில் முறைப்படி அடல்ஸ் ஒன்லி சர்டிபிகேட் வாங்கி ரிலீஸாகியுள்ள இந்த படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு ஒர்த் இல்லை என்பது மட்டுமே நிஜம்.. அதனால் பார்க்க முடிந்தால் பாருங்கள்.. பார்க்க நேரமில்லையென்றால் அதனால் இழப்பொன்றுமில்லை.

மொத்தத்தில் தமிழ் சினிமா ஆண்கள்  மட்டுமே அங்கம் வகிக்கும் அரசவை அல்ல..பெண்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.. என்பதை இன்றைய இளைஞ, இளைஞிகளுக்கு சுட்டிக்காட்ட முயன்றுள்ள படம்தான் இந்த 90 எம்.எல்.

மார்க் 3 / 5

Related Posts

error: Content is protected !!