தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அதிமுகவைச் சேர்ந்த வைத்திலிங்கமும் கே.பி. முனுசாமியும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு 2021 அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள்.
செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.
செப்டம்பர் 27ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.