‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’- தலிபான்களின் புதிய நாடு உதயம்!

‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’- தலிபான்களின் புதிய நாடு உதயம்!

ப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய அரசு பதவி ஏற்றதும் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது..!

தெற்காசிய நாடான ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை 1991-ல் கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் 2001-ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டனர். அதன்பின், ஆப்கனில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது. கடந்த மூன்று வார சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது. கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான் தீவிரவாதிகள் நேற்று கைப்பற்றினர். அந்த நகரை சண்டையிடாமலே கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆப்கனில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். இதனால், அங்கு இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தாக்குதல் நடத்த விருப்பமில்லை. வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறியுள்ளனர். அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், ஆப்கன் அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆப்கன் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், காபூல் நகரில் தாக்குதல் நடத்தப்படவில்லை. அதிகார மாற்றம் அமைதியாக நடக்கும். நகரின் பாதுகாப்பை பாதுகாப்பு படையினர் உறுதி செய்வார்கள் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் குறித்து அதிபர் மாளிகையில் தலிபான் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியதையடுத்து தலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகினார். அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், தலிபான்களின் கட்டுப்பாட்டில் புதிதாக அமையும் இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அதிபர், அமைச்சர்கள், அதிகாரிகள் என மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியவர்கள் வெளியேறியதால் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நிகழலாம் என தெரிவித்துள்ள தலிபான்கள், தேவையான பகுதிகளில் தங்கள் படை நுழைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன், இனி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என அழைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!