அரசியல் வாழ்வில் அதிரடி ஏற்றமும் திடீர் இறக்கமும் ஏன்? – சில நினைவுகள்!

அரசியல் வாழ்வில் அதிரடி ஏற்றமும் திடீர் இறக்கமும் ஏன்? – சில நினைவுகள்!

காமராஜர் பாசறையில் நேரடியாகப் பயின்ற திண்டிவனம் ராமமூர்த்தி தனது 87ம் வயதில் மறைவு எய்திவிட்டார். திண்டிவனம் ராமமூர்த்தியின் அரசியல் அனுபவங்கள் நிகழ்யுக அரசியல் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கும். அவரின் மறைவு தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவற்றில் அவர், வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களை உறுப்பினர், மாநிலங்களவையின் உறுப்பினர் என்றவாறு அவரின் அரசியல் ஆளுமையானது அதிகரித்துக் கொண்டே இருந்ததை உணரலாம். இவை அனைத்துமே 1996ம் ஆண்டு வரை மட்டுமே!

அடுத்தடுத்துத் தொடர் வளர்ச்சிகளைப் பெற்று வந்த திண்டிவனம் ராமமூர்த்தி, திடீர் என்று மிகப்பெரும் அரசியல் சறுக்கலுக்கு ஆளாகிப் போனார். இறுதி வரையிலும் கூட அவரால் மீண்டெழ முடியவில்லை. பரமபதப் பாம்பு கடித்துக் கடை நிலைக்கு ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே அவர் இருந்து மறைந்து விட்டார். மூப்பனாரை விட்டுப் பிரிந்ததில் இருந்து அவரின் சரிதம் சரிந்தது.

கடந்த 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தமிழகம் முனைப்புக் காட்டி வந்த காலகட்டமது. அதிமுக அமைச்சரவை ஜெயலலிதாவின் தலைமையில் செயல்பட்டு வந்தது. 1991 -1996 எனும் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் இருந்தது. இந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வன்ம ஜென்ம அரசியல் வலம் வருவதாகவே தமிழக வாக்காளர்கள் கருதினர். எனவே, “அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது” என்று மூப்பனார் கடும் கருத்தை டெல்லியில் பதியவைத்தார். ஆனால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவோ, “அதிமுகவுடன் தான் கூட்டணி” என்று அடம்பிடித்தார்.

எனவே மூப்பனார் தலைமையில் “தமிழ் மாநில காங்கிரஸ்” உதயமாயிற்று. திமுகவுடன் கூட்டணியும் உறுதியானது. இதற்கு ஆதரவாகவும், அதிமுகவுக்கு எதிராகவும் ‘வாய்ஸ்’ கொடுக்க ரஜினிகாந்த் முன்வந்தார். இந்த அதிரடிக் கூட்டணியால் தமிழகமே தகித்தது. அப்போது நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. மக்களவையைப் பொறுத்தவரை 40க்கு 40 என்று வியத்தகு வெற்றியை இக்கூட்டணி காட்டியது. நரசிம்மராவ் வீழ்ந்தார்.

திமுகவுக்கு உச்சபட்ச அதிகார மையச் சூழல் இருந்த காலமது. மத்தியிலும், மாநிலத்திலும், மாநகராட்சியிலும் திமுகவின் வீறுகொண்டபேறு தான் இருந்தது. இந்த பொதுத் தேர்தலின் போது தமாகா பிரிந்தது அல்லவா? இதில் திண்டிவனம் ராமமூர்த்தி சேராமல் தாய்க்கட்சியாம் காங்கிரசிலேயே இருந்துவிட்டார். முதன்முறையாக அவர் மூப்பனாரிடம் முரண்பட்டு ஒதுங்கினார். ஆனாலும் மூப்பனார் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தியை அழைத்துக் கொண்டே இருந்தார். மக்களவைத் தொகுதிகளைத் திமுகவுடன் பேசிப் பெற்றபோது, திண்டிவனம் தொகுதியையும் கேட்டுப் பெற்றார். திண்டிவனம் ராமமூர்த்தி வருவார் என்ற நம்பிக்கையில் தான் இத்தகு முடிவை மூப்பனார் எடுத்தார். ஆனாலும் கடைசி வரை திண்டிவனம் ராமமூர்த்தி தமாகாவுக்கு வரவே இல்லை.

காத்திருந்து…காத்திருந்துச் சலித்துப் போன மூப்பனார், திண்டிவனம் தொகுதியை திமுகவுக்கே திருப்பித் தந்துவிட்டார். அந்த தொகுதியில் தான் திமுக சார்பில் டி.ஜி.வெங்கட்ராமன் என்ற புதிய முகத்தை கலைஞர் நிறுத்தினார். முரசொலி மாறனின் பலமான பரிந்துரையால் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. வெங்கட்ராமனும் தேர்தலில் வெற்றி ராமனாய் உயர்ந்தார். மத்தியில் அமைந்த கூட்டணி மந்திரி சபையில் திமுக சார்பில் அமைச்சர்கள் ஆனவர்களில் வெங்கட்ராமனும் ஒருவர். அதுவும் இவருக்கு கேபினட் தகுதியுடன் கூடிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

அந்த தேர்தலில் மட்டும் மூப்பனார் எதிர்பார்த்தது போல திண்டிவனம் ராமமூர்த்தி தமாகாவுக்கு வந்து, திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் அவர் நிச்சயம் வென்றிருப்பார். இதற்கு முன்னரும் அதே தொகுதியின் எம்.பி.யாக அவர் இருந்தவர். செல்வாக்குடன் வலம் வந்தவர். இந்த வெற்றியின் பின் டில்லியில் அமைந்த கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்ற தமாக அமைச்சர்களுள் ஒருவராக, அதுவும் கேபினட் அமைச்சராகவே அவர் பதவி பெற்று இருப்பார். அவர் ஏனோ தப்பான முடிவை அப்போது எடுத்துவிட்டார்.

1976ம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் கலைவாணர் சிலைக்கு எதிரில் இருந்த கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது. அப்போது தினமலர் நிருபர் என்ற நிலையில் நான் தினமும் அங்கு சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் முதலில் திண்டிவனம் ராமமூர்த்தியையும் அதன்பின் தான் மூப்பனாரையும் சந்திப்பது என் அனுதினப் பணியாக இருந்தது. எமர்ஜன்சி அமலில் இருந்த அக்காலத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகமே தலைமைச் செயலகம் அளவுக்கு அதிகார பீடமாக விளங்கியது. 1978ம் ஆண்டின் பின், ஆர்.வி.சுவாமிநாதனை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தனர். நெடுமாறனின் பலமான பரிந்துரைக்கு மதிப்பளித்து இந்திரா காந்தி இந்த நியமனம் செய்தார். அப்போது தான் மூப்பனார் அணியினர் அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று. இதனால் திண்டிவனம் ராமமூர்த்தி தனது பொதுச் செயலாளர் பதவியை இழந்து விட்டார். ஆனாலும் 1996ம் ஆண்டு வரை மூப்பனாரின் வலதுகரமாகவே செயல்பட்டு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அவரை, “விசுவாமித்திரர்” என்று செல்லமாகக் குறிப்பிடுவது வழக்கம். ஏன் எனில் அவரின் கோபத்துக்கு ஆளானவர்… காங்கிரஸ் கட்சியில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியாது. அந்த அளவுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி செல்வாக்கின் சிகரத்தில் இருந்தார். 1996ல் அவர் எடுத்த தவறான அரசியல் முடிவுதான் அவரை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டது.

கடைசி வரை அவருடன் நான் தொடர்பில் இருந்து வந்தேன். ஆயிரங்காணி ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலன்கள் அறக்கட்டளையாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஆக்கிரமிக்க ஒரு சக்தி முயன்ற போது ‘தினமலர்’ நாளிதழில் நான்தான் கட்டுரை எழுதி வெளியிட ஏற்பாடு செய்தேன். அதனையடுத்து அனைத்துக் கட்சிகளிலும் இருந்த வன்னியத் தலைவர்கள் ஓரணியில் திரண்டு புட்டிபுலம் கிராமத்தில் ஆலோசனை நடத்தினர். அதில் நானும் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியும் இருந்தார். இந்த கூட்ட முடிவின்படி ஆளவந்தார் சொத்துக்கள் உயர்நீதி மன்ற ஆணையின்படி பாதுகாக்கப்பட்டன.

இந்த நிலையில் வன்னியர் சொத்து பாதுகாப்புக் குழுவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானம் தலைமையில் தமிழக அரசு அமைத்தது. இவரை நான் தொடர்பு கொண்டு ஆளவந்தார் சொத்து விபரங்களைக் கூறினேன். அவரோ, “அந்த கால ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒத்தாசை புரிந்தவர்கள் தற்போது இருக்கிறார்களா?” என்று கேட்டார். நான் திண்டிவனம் ராமமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்தேன். அதன்படி இருவரும் அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து திண்டிவனம் ராமமூர்த்தியும் அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இந் நிலையில் தான் பனையூராம் தன் மனையூரில் திண்டிவனம் ராமமூர்த்தி தன் இறுதி மூச்சை வெளிவிட்டு மறைந்தார். அவரின் அரசியல் வாழ்வில் அதிரடி ஏற்றமும் திடீர் இறக்கமும் ஏன் என்ற ஆய்வினை இளம் அரசியல் தலைவர்கள் கவனத்தில் வைத்துக் கொண்டு களமாட வேண்டும்.

ஆர் நூருல்லா செய்தியாளன்

error: Content is protected !!