கனியின் மொழியில் அரசியல் பேசலாமே!

கனியின் மொழியில் அரசியல் பேசலாமே!

“அழுகிடும் நல்லுறவை அழகிய மாம்பழங்கள் மாற்றிக்காட்டி, ஆரோக்ய அரசியலுக்கு அடிகோலுமா?” என்ற ருசிகர சூழல் இந்திய அரசியல் களத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. கொள்கை மாறுபாடுகளின் பேரால், குதர்க்கக் கூற்றுகளால் கூப்பாடு போட்டுக் கொள்ளும் வழக்கம் அரசியல் அரங்கில் வாடிக்கையாகி விட்டது. எனினும் அத்தி பூத்தாற்போல் அவ்வப்போது சுத்தச் சுகமான நட்புறவு நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. இருவேறு முரண்பாடுகளைக் கொண்டோர் சந்தித்துக் கொண்டால், முகமுறுவலே அகச்சுகத்துக்கு அடிப்படை. ஒருவகையில் பார்த்தால் இருவேறு கோட்பாட்டுக் கோமான்களின் சந்திப்பின் போது, சமாதானத்தின் அடையாளமாக வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்படுவது என்பது தொன்றுதொட்டு நின்று நிலவிவரும் நிலைப்பாடு.

இருவரும் அவரவர் முறுவல்களின் போது காட்டும் வெண்பற்களின் வரிசைகள் இருக்கின்றனவே! அவை தான் வெள்ளைக் கொடிகள். முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர இந்த வெண்பல் வண்ண வீச்சுகள் பெரும் பங்காற்றுகின்றன. சந்திப்புகள் சாத்தியமற்றுப் போகும் போதோ, அதற்குரிய வாய்ப்புகள் தள்ளிப்போகும் நிலை இருக்கும் போதோ… இருவருக்கும் இடையிலான இடைவெளி தொலைதூரத்துக்குத் துரத்தப்பட்டு விடும். இத்தகு தருணங்களில் ஒருவருக்கொருவர் பழங்களையும் பூக்களையும் அனுப்பி வைத்து, நல்லிணக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்பது ஆக்கப்பூர்வமான நோக்கப் போக்கு.

பள்ளிப் பிள்ளைகள் பிரிந்து கூடும் போது, “உங்கூடப் பழம்” என்று கூறி தம் பகைமையை அகற்றிவிடும் தகைமையை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம். படிக்கும் போது ஏற்படும் பண்புநலன், படைக்கும் போதும் நடப்பது என்பது பண்பாட்டுப் பரிணாமத்தின் நீட்சி.  அதேபோலத் தான் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பரஸ்பரம் தங்கள் தாயார்களுக்கு உடுப்புகள் வழங்கிக் கடுப்புகளைக் களைந்து வருகின்றனர் என்பதற்கு சமீபத்திய அரசியல் வரலாற்றில் சான்றுகள் உண்டு. இருவேறு நாடுகளுக்கு இடையேயான இந்த சுணக்கத்தைச் சுட்டெரிக்கும் சூத்திரம் உள்நாட்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் சிங்கச் சீற்றத்துடன் களமாடும் முதிர் கன்னியான மம்தா பானர்ஜி, சமீபத்திய சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அபரிமிதமான பெரும்பான்மை வாக்குகளையும் எம்.எல்.ஏ.க்களையும் ஈட்டி… எறியீட்டியின் எழுச்சியுடன் அரசோச்சி வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு அவர் முதன்முதலாக மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார். அப்போது அவர் இதர மாநில முதல்வர்களுடன், குறிப்பாக மம்தாவைப் போன்றே மக்கள் செல்வாக்குடன் திகழும் முதல்வர்கள் மற்றும் செல்வாக்கின் சிகரத்தில் இருக்கும் நேச நெருக்க நெஞ்சினர்கள் ஆகியோருடன் சுமூக சுகத்துடன் நேசம் பேசி வருகிறார். இதன் ஒரு அடையாளத்தை இங்கு நினைவுகூர்ந்து பார்க்கலாம்.

மேற்கு வங்கம் நீர்வளமும், நிலவளமும் மிக்க விளைச்சல் பூமி. எனவே அங்கு உயர்ரக ஹிம்சாகர், மால்டா, லட்சுமண்போக் ஆகிய மாம்பழ ரகங்கள் அமோக விளைச்சல் காட்டி வருகின்றன. இந்த வகை மாம்பழங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட கிராக்கி உண்டு.

மாம்பழ சீசன்களின் போது கொல்கத்தா நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு இந்த வகை மாம்பழங்களை உணவுடன் சேர்த்து வழங்குவது என்பது சங்க கால உபசரிப்பு போன்ற வங்க கோலச் சுபசரிப்பு. எனவே இந்த மாம்பழங்களை கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்தே நரேந்திர மோடிக்கு, மம்தா வருடந்தோறும் வழங்கி வருகிறார். இத்தகைய பழப் பரிமாற்றத்தின் முதல் முனைப்பின் போது, மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் மோடிக்கும் மம்தாவுக்கும் இடையே நேரடி மோதல் முரண்பாடு ஏதும் கிடையாது. ஆனால் சமீபத்திய மேற்கு வங்கச் சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது பிரச்சாரக் களத்தில் உள்ளூர் அரசியல்வாதி பாணியில் மோடி இறங்கி அடித்தார். ஆனாலும் மக்கள் அவரையே அலறவைத்து விட்டனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்ற பல்வேறு தலைவர்களுக்கும் மம்தா… மாம்பழங்களை அனுப்பி வருகிறார் என்றாலும் அவர் மோடிக்கு மாம்பழம் அனுப்பியதைத்தான் அகில இந்தியாவும் ஆர்வத்துடன் கவனித்தது. அரசியல் களத்தில் கொந்தளிக்கும் சிந்தையளாக இருந்தாலும் நட்பு நலத்தில் பழுத்தப் பழம்தான் மம்தா என்பதை அவர் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

பழங்களை அவர் அனுப்பி வைத்த தகவல்கள் மட்டும்தான் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொண்ட மோடி, நன்றி தெரிவித்து மம்தாவுக்குத் தகவல் அனுப்பி இருக்கக்கூடும். இது சாதாரணமாகச் சம்பவிக்கும் அடிப்படைச் சடங்குதான். ஆனால் மோடியின் நன்றி தெரிவிப்புத் தகவல் வெளிவர வேண்டும். குறைந்தபட்சம் மம்தாவே கூட இத்தகவலை வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டும். மணக்கும் மாம்பழங்கள் இணக்கத்தைப் பேணி இதயங்களை இணைக்கின்றன என்பதே போற்றும் கூற்று.

உறவுப் பராமரிப்பின் உதாரண நாயகியாக இருக்கும் மம்தாவின் நாகரீக நடவடிக்கையை மற்ற முதல்அமைச்சர்களும் கடைப்பிடிக்கலாம். மம்தா அனுப்பி வைத்த மாம்பழங்கள் தமிழகத்துக்கும் வந்தனவா என்று தெரியவில்லை. எனினும் தமிழகத்துக்கே உரித்தான பழவகைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைத்து, அன்புணர்ச்சியைப் புரியவைக்கும் புல்லரிப்புப் பண்பு நலனைத் தமிழக முதல்வரும் மேற்கொள்ளலாம். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2500 கிலோ ஹரி பாங்கா ரக மாம்பழங்களை இந்தியாவுக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக அனுப்பி வைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச எல்லையோர மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா, அஸ்ஸாம் ஆகியவற்றின் முதல் அமைச்சர்களுக்கும் அவர் இந்த மாங்கனிகளை வழங்கவைத்திருக்கிறார். மாநில முதல்வர் பிப்லப் குமார் இம்மாம்பழங்களுக்கு மாற்றாக, திரிபுராவில் விளையும் புகழ்பெற்ற குயின் ராக அன்னாசிப் பழங்களை ஷேக் ஹசீனாவுக்குக் கொடுத்து, பதிலுறவைப் பதியவைத்திருக்கிறார். பழங்களின் வாயிலாகப் பாசப் பரிவர்த்தனைகள் பரவி வருகின்றன. மனிதர்கள் செய்ய வேண்டிய சாதனைகளை மாம்பழங்கள் செய்துவருவது மலைப்பு.

மக்களவையில் திமுகவின் பலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இனி அடுத்தடுத்து மாநிலங்களையிலும் பலம் கூடிக்கொண்டே தான் போகும். இத்தகு செல்வாக்குள்ள தமிழக முதல்வர், இனி அடுத்தடுத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய அவசர அவசியம், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான களமாடலின்போது தொடங்கி விடும் அல்லவா?

கனியின் மொழியில் அரசியல் பேசலாமே!

நூருல்லா ஆர்.

செய்தியாளன்.

09-07-2021.

error: Content is protected !!