புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி!- பிரதமர் மோடி!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி!- பிரதமர் மோடி!

டெல்லியில், மத்திய கல்வி அமைச்சகமும். பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவியாக புதிய கல்வி கொள்கை இருந்து வருகிறது என்றார்.கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் மட்டுமே ஒரே வழி என்றும், எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதன் சாராம்சம் இதோ:

தேசிய கல்வி கொள்கை என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை, பழைய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சுமையை அதிகரிக்கும் வகையில் இருந்தது. பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை.

3 முதல் ஆண்டுகளாக நடத்திய விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் லட்சக்கணக்கான பரிந்துரைகள் குறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களைத் தருகிறார்கள். கொள்கையை மதிப்பாய்வு செய்கிறார்கள். இது ஆரோக்கியமான விவாதம். அது எவ்வளவு அதிகமாக விவாதம் செய்யப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் கல்விமுறைக்கு அது பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை.

கல்வி மற்றும் திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய கல்விக் கொள்கை அவசியம்.

திறன் மேம்பாடு என்பதை அடிப்படையாக கொண்டு நமது புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி அவசியம். மாணவர்கள் புதுவிதமாக சிந்திக்க நாம் வழிகாட்ட வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பலன் அடையும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி என்பது தான் இலக்கு. ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் கல்வி பயில வேண்டும்.

உலகத்தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்களும் பெற வேண்டும். உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்க கூடாது.

மாநில மொழிகளில் பாடம் கற்பிப்பது இளம் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும்.

கல்வி பயிலும் போதே உலக அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடம், வகுப்பறைகளில் மாணவர்களின் சுமைகளை குறைக்க வேண்டும். வகுப்புகள், பாடங்கள் என மாணவர்கள் மீது நாம் அழுத்தம் கொடுக்க கூடாது, கலந்தாலோசனை, ஆய்வு அடிப்படையிலான கல்வியை நாம் ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களுக்கு பலதரப்பட்ட வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும்.

சீர்திருத்தங்களை நாம் வேகப்படுத்தும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மேம்படும்.

அனைத்துவிதமான தொழிலாளர்களும் மதிப்பு மிக்கவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க கூடாது. தொழிலாளர்களை இளக்காரமாக பார்க்கும் போக்கை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிறப்பான உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கும்.

புதிய கல்விக் கொள்கையால் நாடு புதிய நிபுணர்களை எதிர்காலத்தில் பெறும், புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களின் திறன்களையும் மேம்படுத்தும்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் வெற்றியை நாம் அனைவரும் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்.

இப்படியாக பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக்கொள்கை குறித்து விளக்கம் அளித்தார்

Related Posts

error: Content is protected !!