திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு  அனுமதி!

கொடூரமான கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்பட்டது. இதே போல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட அனைத்து தேவஸ்தான பாராமரிப்பு கோயில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு 5-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்தபோதிலும், வழிபாட்டு தலங்களை 8-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என அறிவித்தது.

அதன்படி ஆந்திராவில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில் அதிகமாக பக்தர்கள் செல்லும்முக்கிய கோவில்களில் ஆன்லைன்மூலம் தரிசனத்துக்கு முன் பதிவுசெய்து பக்தர்களை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வரும் 8-ம் தேதி முதல் திருப்பதி கோயில் திறக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் தரிசன வரிசை, லட்டு பிரசாத மையம், தலை முடி காணிக்கை செலுத்துமிடம், அன்னதான மையம் போன்ற முக்கிய இடங்களில் 3 அடி இடைவெளி இருக்கும் வகையில் தரையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும், 1 மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

அந்த வகையில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரைமட்டுமே தரிசிக்க இயலும். மற்றவர்களுக்கு மறுநாள்தான் வாய்ப்பு வழங்க நேரிடும். கண்டிப்பாக அனைத்து பக்தர்களும் முகக் கவசம் அணிய வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்கள் முதற் கொண்டு, பக்தர்கள், அவர்கள் கொண்டு செல்லும்பொருட்கள் போன்ற அனைத்தும்கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் தேவஸ்தான ஊழியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும். மொட்டை அடிப்பதற்கு முன்பும், பின்னரும் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். மத்திய அரசின் நிபந்தனையின்படி ஒரு அறையில் 2 பக்தர்கள் மட்டுமே தங்க வேண்டும்.

error: Content is protected !!