75,000 வழக்குகள் வெயிட்டிங்! -மத்தியஸ்தம் எனும் மாயவலை!

75,000 வழக்குகள் வெயிட்டிங்! -மத்தியஸ்தம் எனும் மாயவலை!

நீதிமன்ற வழக்காடல்களை விட விரைவாகவும், எளிமையாகவும் தீர்வுகளைக் காண்பதற்காகவே ‘மத்தியஸ்தம்’ (Arbitration) முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், நடைமுறையில் இந்தத் திட்டமும் நீதிமன்றங்களின் நீண்ட கால தாமத வலைக்குள் சிக்கித் திணறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க்யூபிக்ட்ரீ (Cubictree) மற்றும் இடி லீகல் வேர்ல்ட் (ETLegalWorld) ஆய்வின்படி, நாடு முழுவதும் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்த ஒரு விரிவான அலசல் இதோ.

புள்ளிவிவரங்கள் சொல்லும் கசப்பான உண்மை: மத்தியஸ்த முடிவுகளை எதிர்த்துத் தொடரப்படும் வழக்குகள் (Section 34), இந்த நடைமுறையின் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளன.

  • மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க உயர் நீதிமன்றங்கள் சராசரியாக 18.69 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.

  • மாவட்ட நீதிமன்றங்களோ இன்னும் ஒருபடி மேலே போய் சராசரியாக 30.56 மாதங்கள் காலதாமதம் செய்கின்றன.

  • குறிப்பாக, ‘செக்ஷன் 34’ சவால்கள் தீர்க்கப்பட சராசரியாக 53.79 மாதங்கள் ஆகின்றன. சட்டப்படி ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவது அதன் நோக்கத்தையே சிதைக்கிறது.

நிபுணர்களின் பார்வை: இது குறித்து ஹெச்.சி.எல் (HCL Infosystems) நிறுவனத்தின் பொது ஆலோசகர் அமித் சக்சேனா கூறுகையில், “மத்தியஸ்தம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒழுக்கத்தைக் கோருகிறது. இறுக்கமான காலக்கெடு, தேவையற்ற ஒத்திவைப்புகளைத் தவிர்த்தல் மற்றும் நடைமுறைச் சீர்திருத்தம் ஆகியவை அவசியம்” என வலியுறுத்துகிறார்.

நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்வுகள் என்ன?

மத்தியஸ்தம் அதன் நம்பகத்தன்மையை இழக்காமல் இருக்க நீதிமன்றங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:

  1. பிரத்யேக அமர்வுகள் (Specialized Benches): மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகளை மட்டும் விசாரிக்க உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தனிப்பிரிவு அல்லது பிரத்யேக அமர்வுகளை உருவாக்க வேண்டும்.

  2. காலக்கெடுவை அமல்படுத்துதல்: சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஓராண்டு கால அவகாசத்தைக் கட்டாயமாக்க வேண்டும். தேவையற்ற ஒத்திவைப்புகளைக் கோரும் தரப்பினருக்குக் கடுமையான அபராதம் விதிக்கலாம்.

  3. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: வழக்குகளை மின்-தாக்கல் (E-filing) செய்வது மற்றும் இணையவழிக் கூடல்களைத் (Virtual hearings) தீவிரப்படுத்துவதன் மூலம் நேர விரயத்தைக் குறைக்கலாம்.

  4. நிறுவனமயமாக்கப்பட்ட மத்தியஸ்தம்: தனிப்பட்ட மத்தியஸ்தர்களை விட, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் (Institutional Arbitration) மூலம் வழக்குகளைக் கையாளுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

  5. 2024 திருத்த மசோதா: தற்போது முன்மொழியப்பட்டுள்ள மத்தியஸ்த மற்றும் சமரசத் திருத்த மசோதா 2024-ஐ வலுவான ஒழுங்குமுறை விதிகளுடன் அமல்படுத்த வேண்டும்.

மொத்தத்தில் விரைவான நீதி என்பது ஒரு வணிக அமைப்பிற்கும், சாமானிய மனிதனுக்கும் மிக முக்கியமானது. காலத்தே வழங்கப்படாத நீதி, அநீதிக்குச் சமம். எனவே, மத்தியஸ்தம் என்ற கருவி மொக்கையாகிப் போகாமல் இருக்க, நீதிமன்றங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!