கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.201 கோடி குறைந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

மூன்றாவது நாளாக இன்று கூடிய சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டில் ரூ.26.995 கோடியே 25 லட்சமாக இருந்த டாஸ்மாக் வருமானம், இந்தாண்டில் ரூ.26.794 கோடியே 11லட்சமாக குறைந்துள்ளது. மொத்தம் ரூ.201 கோடி வருமானம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 11 இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கிவருகின்றன.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டில் 10,08,625 பீர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.161.69 லட்சம் பெறப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் திருட்டைத் தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40மதுக்கடைகளில் எச்சரிக்கை ஒலி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் 1250 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 750 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 600 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 500 ரூபாயும், ஊதிய உயர்வாக வழங்கப்படும்.

ஊதிய உயர்வால் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 7,287 பேரும், 3,644 உதவி விற்பனையாளர்களும் பயன் பெறுவார்கள்.

டாஸ்மாக் ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

error: Content is protected !!