வெள்ளித்திரையில் 50 ஆண்டுகள்: கே.பாக்யராஜின் சுவாரஸ்யமான கலைப்பயணம்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையான கே.பாக்யராஜ், திரையுலகில் தனது 50-வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இன்று தனது பிறந்தநாளை ஒட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது நெடிய பயணத்தின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
‘கோவை ராஜா’ டூ ‘கே.பாக்யராஜ்’
ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடும் போது, ‘கோவை ராஜா’ என்று கெத்தாகப் பெயர் சொல்லிக் கொண்டவர், பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தில் தான் தனது உண்மையான பெயரான பாக்யராஜ் என்பதைப் பயன்படுத்தினார். டைட்டில் கார்டில் அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு, “யார் இந்த பாக்யராஜ்?” என்று இயக்குனரே கேட்கும் அளவிற்கு அது ஆச்சரியமாக அமைந்தது. தனது தாயார் வைத்த பெயரையும், அவர் கொடுத்த பாக்கியத்தையும் இழக்கக் கூடாது என்பதற்காகவே ‘கே.பாக்யராஜ்’ என்ற பெயரை அவர் நிலைநிறுத்திக் கொண்டார்.

16 வயதினிலே தந்த மேஜிக்
கமல்ஹாசன் சமீபத்தில் குறிப்பிட்டது போல, ‘16 வயதினிலே’ படத்தில் பணியாற்றிய அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அனைவரும் பின்னாளில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டனர். அந்தப் படத்தில் துணை இயக்குனராகப் பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், படிப்படியாக வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் எனத் தன்னைச் செதுக்கிக் கொண்டார்.
தாயின் வாக்கும்… கழுதைப் படமும்!
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது ஒரு காட்சிக்காகக் கழுதையை அழைத்து வந்த பாக்யராஜின் புகைப்படம் போஸ்டர்களில் வெளியானது. இதைப் பார்த்த உறவினர்கள் “கழுதை மேய்க்கவா சினிமாவிற்குச் சென்றாய்?” என கிண்டல் செய்தபோது, அவரது தாயார் மட்டும் “உன்னுடைய இயக்குனரே உன்னை ஹீரோவாக வைத்துப் படம் எடுப்பார்” என்று நம்பிக்கை ஊட்டினார். அவர் சொன்னது போலவே ‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலம் அது நனவானது, ஆனால் அதைக் காண அவரது தாயார் உயிருடன் இல்லை என்பது ஒரு மாறாத வடு.
நேர்மை கற்றுக்கொடுத்த தேன்மிட்டாய்
சிறுவயதில் தேன்மிட்டாய் வாங்க காசுக்குப் பதில் தெரியாமல் தனது தாயாரின் தங்க மோதிரத்தைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார் பாக்யராஜ். ஆனால், அந்தத் தங்க மோதிரத்தை நேர்மையாகத் திருப்பிக் கொடுத்த அந்தக் கடைக்காரர் தான், வாழ்வில் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைப் பாக்யராஜிற்கு சிறுவயதிலேயே போதித்தவர்.
அடுத்த அதிரடி
50 ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை என்று வியக்கும் பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் மக்கள் சேவை, சிவாஜியின் தொழில் பக்தி, கமலின் நடிப்பு, ரஜினியின் எதார்த்தம் என அனைவரிடமிருந்தும் பாடம் கற்றதாகக் குறிப்பிட்டார். தற்போது ஒரு வெப் தொடர் மற்றும் புதிய திரைப்படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அவர், இந்த ஆண்டைப் புதிய முயற்சிகளின் ஆண்டாக மாற்றத் தயாராகி வருகிறார்.
கட்டிங் கண்ணையா


