ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை! – ஐ.நா. ரிப்போர்ட்
கையில் கிடைக்கு எந்த பத்திரிகையிலாவது வீட்டு வேலை செய்யும் லேடீஸ் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாதவை உண்டோ? நிஜத்தைச் சொல்லுங்கள்.. வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வரா விட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு. வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.
இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.
இந்நிலையில்தான் சர்வதேச அளவில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இரண்டரை மடங்கு வரை பெண்கள் வீட்டு வேலைகள் கூடுதலாக உள்ளது எனவும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 5:09 என்ற விகிதத்தில் பெண்கள் ஊதிய பணிகளில் உள்ளதாகவும் 4:11 என்ற விகிதத்தில் பெண்கள் ஊதியமற்ற இதர வேலைகள் புரிவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேபோல் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் 4:39 என்ற விகித அளவில் பெண்கள் ஊதியப் பணியாற்றுவதாகவும் 3:30 என்ற அளவில் ஊதியமில்லா கூடுதல் பணிகளை கவனிப்பதாகவும் அந்த ஆய்வு தகவல் கூறுகிறது.
அத்துடன் ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான காலம் இது என்றும் ஐநா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.