நாங்க ரெடி! -ஜெயலலிதாவின் அ தி மு க வேட்பாளர் பட்டியல் + டூர் லிஸ்ட் வெளியானது
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள் ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா.அத்துடன், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன என்பதும் இப்பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன். 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பட்டியலைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரசார தேதியின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி வரும் 9-ம் தேதி தனது தனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, மே மாதம் 12-ம் தேதி தனது பிரசாரத்தை முடிக்கிறார். மொத்தம் 15 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 9-ம் தேதி ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து சென்னை மண்டலத்திற்குட்பட்ட வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.ஏப்ரல் 11-ல் கடலூர் மண்டலத்திலும், 13-ல் தருமபுரி மண்டலத்திலும், 15-ம் தேதி விருதுநகர் மண்டலத்திலும், 18-ம் தேதி காஞ்சிபுரம் மண்டலத்திலும், 20-ல் சேலம் மண்டலத்திலும், 23-ல் திருச்சி மண்டலத்திலும் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
ஏப்ரல் 25-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திலும், 27-ல் மதுரை மண்டலத்திலும், மே 1-ல் கோவை மண்டலத்திலும், மே 3-ல் விழுப்புரம் மண்டலத்திலும், 5-ல் ஈரோடு மண்டலத்திலும், 8-ல் தஞ்சை மண்டலத்திலும், 10-ல் நெல்லை மண்டலத்திலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஜெயலலிதா, மே 12-ல் வேலூர் மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தனது பிரசாரத்தை முடிக்கிறார்.


