2019 மக்களவை தேர்தல்: கன்னோஜ் தொகுதிக்கு டிமாண்ட்!
வரும் 2019 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசம் கன்னோஜ் தொகுதியிலும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மெயின்பூரி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியின் தலைமையகத்தில் அகிலேஷ் யாதவ் தன் கட்சி உறுப்பினர்களை இன்று சந்தித்துப்பேசினார். இதில் வரும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவுள்ள தொகுதி குறித்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார். இதில் பேசிய அகிலேஷ் யாதவ், ”எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், நான் கன்னோஜ் தொகுதியிலும், என் தந்தை முலாயம் சிங் யாதவ் மெயின்பூரி தொகுதியிலும் போட்டியிடவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், ”நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் சரி. எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெற்றியை உறுதிபடுத்தி, பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவார்கள்” என்று சூளுரைத்தார்.
மேலும், ”இந்த முறை பாஜகவை பற்றி மக்கள் நன்றாக புரிந்துகொண்டு விட்டனர். ஆகையால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இம்முறை கிடைக்காது. அவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்தனர். ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை” என்று அகிலேஷ் யாதவ் கிண்டலடித்தார்.
கன்னாஜ் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பில் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது