ரஷிய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி!
ரஷிய பாராளுமன்றமான ‘டூமா’விற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஆனால் மிக குறைந்த சதவீத அளவிலான வாக்குகளே பதிவானது. நாடுமுழுவதும் ஓட்டுப்பதிவு முடிவடைந்தபோது மொத்தம் 48 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. இதுவரை நடந்த ரஷிய பாராளுமன்ற தேர்தலில் இதுதான் மிகக் குறைந்த சதவீத வாக்குப் பதிவு ஆகும். இந்த தேர்தலில் மொத்தம் 10 கட்சிகள் போட்டியிட்டன. மார்டோவியா உள்பட பல்வேறு பகுதிகளில் புதின் கட்சியினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றியதாகவும், கள்ள ஓட்டுகள் அதிக அளவில் போடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார்கூறப்பட்டது. ஆனால் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.

343 இடங்களில் வெற்றிஇந்த நிலையில் ஓட்டுப் பதிவு முடிந்த உடனேயே ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதின் ஆதரவு கட்சியான ஐக்கிய ரஷிய கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.93 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தபோது, அக்கட்சிக்கு மட்டும் 54.3 சதவீத ஓட்டுகள் கிடைத்து இருந்தது. மேலும் பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையான 450–ல் 343 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.எல்.டி.பி.ஆர். என்ற கட்சிக்கு 15.1 சதவீத ஓட்டுகளும், கம்யூனிஸ்டு கட்சிக்கு 14.9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஜஸ்ட் ரஷிய கட்சி 6.4 சதவீத ஓட்டுகளுடன் 4–வது இடத்தை பிடித்தது.
மேற்கண்ட இந்த 3 கட்சிகளுமே முக்கியமான விஷயங்களில் புதினை விமர்சிக்காமல் அரசுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் செயல்படப்போவதாக அறிவித்து உள்ளன. இதர 6 கட்சிகளுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளே கிடைத்தன.புதினுக்கு வாய்ப்புபுதின் ஆதரவு ஐக்கிய ரஷிய கட்சி அமோக வெற்றி பெற்று இருப்பதன் மூலம் 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் 63 வயது புதின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்தியநாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததால் அந்நாட்டில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை நிலவி வருகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் ரஷியாவில் புதினின் கை ஓங்கி இருப்பது அவர் மீது ரஷிய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


