பாபா ராம்தேவ் வழங்கும் பதாஞ்சலி நூடூல்ஸ் மேகிக்கு போட்டியா?
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் உள்ளதாக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையைக் கோர்ட்டுக்கு போய் தகர்த்தெறிந்து விட்டு ஐந்து மாச இடைவெளிக்குப் பின்னர் விற்பனைக்கு வந்து சாதனை புரிந்த நிலையில் யோகா குரு பாபா ராம் தேவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதாஞ்சலி நுடூல்ஸ் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

முழு கோதுமை மாவால் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த நூடூல்ஸ் 70 கிராம் பாக்கெட் ரூ. 15க்கு விற்பனை செய்யப் படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பிக் பசார், நீலகிரி பல்பொருள் அங்காடிகள் மூலம் பதாஞ்சலி நூடூல்ஸ் விற்பனை செய்யப்படும்.
நூடூல்ஸ் அறிமுக விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம் தேவ், ’நூடூல்ஸ் விற்பனையில் கிடைக்கும் லாபம் கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செலவிடப்படும்’ என்றார். அத் துடன் ’இந்தியர் களுக்காக இந்தியாவிலே தயாரிக்கப்படும் சத்தான உணவு என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நூடூல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் ’அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஆறு உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படும். தலைநகர் டெல்லியில் தொடங்கப்படும் உற்பத்தி நிலையம் மூலம் 100 முதல் 200 டன் நூடூல்ஸ் உற்பத்தி செய்யப்படும்’ என்றும் தெரிவித்தார் ராம்தேவ்..
பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடங்கப்பட்டுள்ள பதஞ்சலி நிறுவனம் மூலம் பழச்சாறுகள், ஆரோக்கிய பானங்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது!.


