தீபாவளி தினத்தில் 108 சேவை அதிகரிப்பு!

தீபாவளி தினத்தில் 108 சேவை அதிகரிப்பு!

108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இச்சேவையின் மூலம், தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதனிடையே கடந்த தீபாவளி அன்று, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை பயன்பாடு, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும், 22,667 அழைப்புகள் வந்துள்ளனளன.
ambulance 108
தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயன் அடையும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப் பட்டது.இதனால், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் திடீர் விபத்து ஏற்பட்டாலோ நோய் வாய்பட்டாலோ உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சாலை விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களை, உடனடியாக மருத்துவமனை களுக்கு கொண்டு செல்ல, இலவச, 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, பிரசவம், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும், இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுகிறது.ஆண்டு முழுவதையும் ஒப்பிடும்போது, தீபாவளி சமயத்திலேயே ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் அதிகம் வரும்.இந்த வகையில்,இந்த தீபாவளியை முன்னிட்டு, இந்த ஆண்டு அதிகபட்சமாக, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, 22,667 அழைப்புகள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டை (16,002) விட, அதிகம். அதே போல், தீபாவளிக்கு முந்தைய நாளிலும், கடந்த ஆண்டை (14,896) விட, இந்த ஆண்டு (19,602) அதிக அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு, 3,024 அவசர அழைப்புகளுக்கு, தீர்வு காணப்பட்டது. இந்த ஆண்டு, 3,413 அழைப்புகளில், சம்பந்தப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சேவைகளைப் பொறுத்தவரை, பிரசவம், பக்கவாதம், சாலை விபத்து மற்றும் மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்னைகளுக்கு. கடந்த ஆண்டை விட அதிகமான சேவை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 6 ஆண்டுகளில் இச்சேவையின் மூலம் 32 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதில், கர்ப்பிணிகள் 8.39 லட்சம் பேரும், சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் 7.59 லட்சம் பேரும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் 1.73 லட்சம் பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!