32°C
விளம்பரம்
Advertisement

தலைமாறிய மகுடம்!

admin சேலம் Published: November 24, 2013 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உலக செஸ் சேம்பியனாக மேக்னஸ் கார்ல்சன் வாகை சூடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. சென்னையில் முதல் தடவையாக நடக்கும் போட்டியில் நம்மூர் ஆனந்த் பட்டத்தை தக்கவைத்தால் பெருமை என மனதோரம் ஆசை படபடத்ததிலும் தப்பில்லை.ஆனந்த் நிறைய சாதித்துவிட்டார். தாய்நாட்டில் செஸ் புத்துயிர் பெற பெரும் பங்களித்துள்ளார். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் நிறைவு பெறும் என்ற நியதிக்கு விதிவிலக்கு கிடையாதுதானே.
nov 24 - edit chessmagnus-carlsen.
நார்வேயின் இளம்புயல் மேக்னஸ் 10 சுற்றுகளில் ஆறரை புள்ளிகள் எடுத்து 2 சுற்றுகளுக்கு முன்பாக ஆட்டத்தை முடித்திருக்கிறார். ஐந்து முறை உலக சேம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் முதல் தடவையாக ஒரு சுற்றில்கூட வெல்ல இயலாமல் மூன்றரை புள்ளிகளுடன் ரூ5.6 கோடி பரிசுத் தொகை பெறுகிறார். மேக்னஸ் 8.4 கோடி. மேக்னஸ் வயது 22. ஆனந்தில் பாதி. செஸ் வீரனாக தெரியவில்லை. சீரியஸ் பார்வை இல்லை. இயல்பாக சிரிக்க முடிகிறது. ஜோக் அடிக்கிறார். விளையாட்டைவிட மாடலிங் மூலம் ஐரோப்பாவில் பிரபலமானதில் ஆச்சரியமில்லை. அந்த தோற்றத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கும் திறமை அசாத்தியமானது.

மெல்ல மெல்ல அழுத்தம் கொடுக்க எனக்கு பிடிக்கும். அப்படியே பாரம் ஏற்றி நெருக்கும்போது எதிராளியின் மன உறுதி நொறுங்குவதை மனக்கண்ணில் பார்த்து ரசிப்பேன்’ என்கிறார்.

டென்னிஸ், ஃபுட்பால் மாதிரியான ஆட்டங்கள்தான் சீக்கிரம் களைப்பாக்கும் என்றில்லை. செஸ் போர்டை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலே சக்தியெல்லாம் வற்றிப் போகும். அதை தாங்கும் உடல் பலமும் மேக்னசுக்கு இருப்பது தெரிகிறது. உலகின் தலைசிறந்த செஸ் மேதை என கூறப்படும் கேரி கேஸ்பரோவுடன் 13 வயதில் விளையாடி மேக்னஸ் டிரா செய்தபோது சதுரங்க உலகின் ஹேரி பாட்டர்’ என்று பாராட்டினார் அவர். பத்தாயிரம் ஆட்டங்கள் அப்படியே அவர் மூளைக்குள் பதிவாகி இருப்பதாகவும், அவற்றின் எந்த ஒரு நகர்த்தலையும் விவரிக்க இயலும் என்றும் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

எனவே இன்னும் பல பல ஆண்டுகளுக்கு மேக்னஸ் கார்ல்சனின் ஆதிக்கம் உலக செஸ் அரங்கில் மேலோங்கி விளங்கும் என நம்பலாம். சாதிக்கத் துடிக்கும் அடுத்த தலைமுறையிடம் ஆட்சியை ஒப்படைத்தது ஒரு தமிழன் என்பதில் ஆறுதல் அடைவோம்.

தினகரன் தலையங்கம்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்