சலார் – விமர்சனம்!

சலார் – விமர்சனம்!

டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட், மோலிவுட், சாண்டல்வு, பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நாயகன் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் பேன் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறச் செய்தது. அந்த பிரம்மாண்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா? என்ற கேள்விக்கு உடனடி பதில் சொல்ல வழியில்லாமல் பண்ணி விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆம்.. தான் எந்த கதையை தேர்ந்தெடுதாலும் , அதை கொடுக்கும் விதமே தனி ஸ்டைல் என்பதை மறுபடியும் நிரூபிக்க முயற்சித்திருக்கும் கே.ஜி.எஃப் ஹிட் புகழ் டைரக்டர் பிரசாந்த் நீல், தனது முந்தைய வெற்றி படத்தின் சாயலில் பயணித்திருப்பது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. அதிலும் கதை நடக்கும் களம், கேரக்டர்கள் ஆகியவை ரசிகர்களை சலாருடன் இணைய விடாமல் செய்வது படத்தின் பெரும் குறை. ஆனால், இந்த குறைகளை மறைக்கும் விதத்தில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், பிரமாண்டமும் அமைந்திருக்கிறது என்பதென்னவோ நிஜம்,.!

படத்தின் கதை என்ன என்று கேட்டால் சர்வதேச வரைபடத்தில் இடம் பெறாத கான்சார் தனி நாடாக இயங்குகிறது. அதன் அதிபதி ராஜமன்னார் (ஜெகபதி பாபு) தனக்கு .பின்னால் அரியணை ஏற தகுதியானவர் வரதராஜமன்னார் (பிருத்வி ராஜ்) என முடிவு செய்கிறார். அதை உடனிருக்கும் அமைச்சர்கள் ஏற்காமல் வெளிநாட்டு உதவி டன் படை திரட்டுகின்றனர்.அதே சமயம் வரதராஜன் மட்டும் படை திரட்டாமல் தனது சிறுவயது நண்பன் சலாரை (பிரபாஸ்) அழைத்து வருகிறான். ஒற்றை வீரன் சலார் எப்படி பெரும்படை யை தோற்கடிக்கிறான் என்பதற்கு ரத்தம் கொப்பளிக்க பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ். படத்தில் நிறைய கிளைக்கதைகள் உள்ளதால் பிரதான அம்சத்தை. மட்டும் மேற்சொன்ன கதை விவரிக்கிறது..குறிப்பாக இப்படி நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரம் காட்டும் போது, அவரைப் பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பது இரண்டாம் பாகத்தில் சொல்லப் போகிறாராம்…!!

ஹீரோவாக நடித்திருக்கும் பிரபாஸுக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு அவர் நூறு சதவீதம் பொருந்துகிறார். ஆறடி உயரத்தில், வாட்டசாட்டமாக ஆக்‌ஷன் காட்சிகளுக்கேற்ற உடல்வாகு, உடல்மொழி, கோபம் என ‘ஒன்மேன் ஆர்மி’யாக கச்சிதமாகப் பொருந்திப்போகும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அமைதியாகவே இருக்கும் பிரபாஸ் வசனம் பேசுவதும், நடிப்பதும் மிக மிக குறைவு தான், காரணம் அவரை நிற்க வைத்தும், மற்றவர்களை அடிக்க வைத்துமே பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய நடிப்பை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் சகல சீன்களுக்கும் ஒரே முகபாவைக் காட்டி சலிப்பூட்டுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு தான் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் மனைவியின் மகன் என்பதால் சிறுவயதில் இருந்தே நிராகரிக்கப்பட்டு வரும், அவரை கான்சார் அதிகார வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து அவமானப்படுத்தும் காட்சிகளின் போது தனது உணர்ச்சிகரமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், வழக்கம் போல் வந்து போகிறார். ஆனால் அவர் மீது கேமராமேனுக்கும், மேக்கப் மேனும் என்ன கோபமோ -கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் கான்சார் மற்றும் பிரபாஸ் பற்றிய கதையை கேட்பது தான் அவருடைய வேலை என்பதால் அவருக்கு நடிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் அவருக்கான வேலையை எப்பொழுதும் போல் சிறப்பாகச் செய்திருக்கிறார். வில்லன் பிரித்விராஜ் பல காட்சிகளில் மௌனம் மட்டுமே சாதிக்கிறார். போகப் போக வசனம் பேசி இறுதிக் கட்டத்தில் வெடிக்கிறார். இவருக்கான வேலை இரண்டாம் பாகத்தில் நிறையவே இருக்கிறது என்பதை அந்த காட்சி மூலம் காட்டியிருக்கிறார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ராம் உட்பட பலர் அவரவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு சேர்த்து பிரம்மாண்டத்தைக் கூட்டி உள்ளனர். கேமராமேன் புவன் கௌடா ஒளிப்பதிவில் இந்த சலார் படமும் கறுப்பு, வெள்ளை டோனில் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதனாலேயே படம் கொஞ்ச தரமாக இருக்கிறது. குறிப்பாக படத்திற்கான லைட்டிங் அபாரம். ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை கேஜிஎப் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

டைரக்டர் பிரசாந்த் நீல் தப் பாணியில் பிரமாண்டத்தை கொஞ்சம் மசாலா டெக்னிகளுடன் வழங்கினால் ரசித்து விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார்..அதிலும் இம்புட்டு கொலைகளையும், ரத்த வழிதலையும் காட்டியே கடுப்பேற்றி அனுப்பி விடுகிறார்

மொத்தத்தில் சலார் – ஹாஃப்பாயில்

மார்க்

error: Content is protected !!