சபரிமலை ; பெண்களுக்கான தடையை விலக்கத் தயார் – கேரளா அரசு தகவல்

சபரிமலை ; பெண்களுக்கான தடையை விலக்கத் தயார் – கேரளா அரசு தகவல்

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து உள்ள வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, பெண்கள் என்ற காரணத்துக்காக கோவிலுக்குள் செல்ல அவர்களுக்கு சட்டப்படி தடை விதிக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு தடை விதிப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதால், இந்த வழக்கு 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கூட மாற்றப்படும் நிலை ஏற்படலாம் என்றும் அப்போது அவர்கள் கூறியதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

sabarimalai nov 8

இந்த நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் கேரள அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெயதீப் குப்தா பதில் அளிக்கையில், ‘‘அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கும் வகையில் 2007–ம் ஆண்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு எடுத்த நிலைப்பாட்டையே தற்போதைய அரசும் எடுப்பதற்காக பரிசீலித்து வருகிறது’’ என்று கூறினார்.

இதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், மாநில அரசு இது போன்று நிலைப்பாடுகளை மாற்றுவது ஏற்புடையது அல்ல என்றும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.அத்துடன், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதிகள், இப்போதைய நிலையில் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது சரியாக இருக்காது என்று கூறினார்கள்.அத்துடன், கேரள அரசு தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டிருப்பதால், இந்த வழக்கு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டி இருப்பதாவும், எனவே வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி 20–ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் கூறினார்கள். வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி அப்போது தீர்மானிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts

error: Content is protected !!