உலக மூளை தினம்: ஜூலை 22 – நம்மை வழிநடத்தும் ஆற்றல் மையம்
அட அடா! அம்மா தினம், அப்பா தினம், காதலர்கள் தினம்னு பல தினங்கள் டைப்பில், இன்னைக்கு உலக மூளை தினம் (World Brain Day) என்பது உண்மையிலேயே ஒரு விசேஷமான ரிமைண்டர்தான்! 2014 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த தினம், நம்ம உடலின் சூப்பர் ஸ்டாரான மூளையின் மகத்துவத்தை பறைசாற்றுகிறது . இந்த நாள், மனித உடலின் மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான மூளையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், மூளை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மூளை என்பது வெறும் ஒரு உறுப்பு அல்ல; அது நமது அடையாளம், நமது திறன்கள், நமது உணர்வுகள் அனைத்தின் இருப்பிடம். எனவே, ஜூலை 22 அன்று மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் நமது மூளையைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தைப் பேணுவோம். ஏனென்றால், ஒரு ஆரோக்கியமான மூளையே ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல்!

ஏன் மூளை தினம்?
நவீன உலகில், மூளை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. அல்சைமர், பார்கின்சன், பக்கவாதம், மனச்சோர்வு, வலிப்பு நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற பல்வேறு மூளை மற்றும் நரம்பியல் கோளாறுகள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கின்றன. இந்த நோய்கள் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் சுமையாக அமைகின்றன.
உலக மூளை தினம், இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இது, குறிப்பிட்ட மூளை ஆரோக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த உதவுகிறது.
மூளையின் பிரமிக்க வைக்கும் அம்சங்கள்:
மனித உடலில் மூளை என்பது ஒரு தலைமைச் செயலகம் போன்றது. நமது எண்ணங்கள், உணர்வுகள், அசைவுகள், உணர்ச்சிகள், நினைவாற்றல் மற்றும் அனைத்து முக்கிய உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பு மூளைக்கு உண்டு. நாம் சிந்திப்பது, உணர்வது, பேசுவது, பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, தொடுவது என நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ளவும், அதற்கு எதிர்வினையாற்றவும் மூளையே அடிப்படையாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால், நம்மை ஒரு முழுமையான மனிதனாக்கும் அனைத்து அம்சங்களும் மூளையின் செயல்பாடுகளாலேயே சாத்தியமாகின்றன.
- நியூரான்களின் பெருங்கடல்: நம்ம மூளை பில்லியன் கணக்கான நியூரான்களால் (நரம்பு செல்கள்) ஆனது. இந்த நியூரான்கள் எல்லாம் சினாப்சஸ் எனப்படும் டிரில்லியன் கணக்கான இணைப்புகள் மூலம் ஒண்ணுக்கொண்ணு பேசிக்கொள்ளுது. இந்த தொடர்பு வலையமைப்புதான் நம்ம எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படை!
- அபாரமான சேமிப்புத் திறன்: மனித மூளையோட சேமிப்புத் திறன் அபாரமானதுன்னு சொல்றாங்க. ஆராய்ச்சிகள் படி, ஒரு மனித மூளையில் சுமார் 86 பில்லியன் நியூரான்கள் இருக்குதாம். இவ்வளவு நியூரான்கள் கொண்ட ஒரு அமைப்புன்னா எவ்வளவு தகவல்களை சேமிக்க முடியும்னு நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்க!
- எடையும் அளவும்: ஒரு சராசரி வயது வந்த மனித மூளையோட எடை சுமார் 3 பவுண்டுகள் (சுமார் 1.36 கிலோ) இருக்கும். இது ஒரு அரை கேலன் பால் அளவுக்கு சமம். ஆண்களுக்கு பெண்களை விட மூளை சற்று பெரியதா இருக்கும், ஆனா இது அவங்களோட புத்திசாலித்தனத்தை பாதிக்காதுங்குறது குறிப்பிடத்தக்கது.
- வளர்ச்சிக்கு ஒரு முடிவே இல்லை! பிறக்கும்போது எந்த அளவில் இருந்ததோ அதே அளவில்தான் மூளை கடைசிவரை இருக்கும்னு சொல்றது தவறு. பிறந்த குழந்தையோட தலை உடம்பை விட பெரிசா இருக்குறதை வச்சு ஒரு சின்ன பாயிண்ட் சொல்றாங்க. ஆனால், நம்ம மூளைக்கு வயது ஒரு தடையில்லை! டீன் ஏஜ்ல, இருபதுகள்ல நம்ம உடலின் சில உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தினாலும், மூளை அப்படியில்லை. 40 வயதிலும் கூட மூளை தன்னை மேம்படுத்திக்கிட்டே இருக்குமாம். புதுசா கத்துக்கும்போதும், அந்த தகவல்களை மூளை ஏத்துக்கிட்டு பதிவு செய்யுது.
மூளையின் மின்சக்தி மற்றும் சுவாரஸ்யமான ஒப்பிடுகள்:
நம்ம மூளை 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யுமாம்! ஒரு சின்ன எலக்ட்ரிக் பல்பை எரிய வைக்கும் அளவுக்கு இந்த மின்சாரம் இருக்கும். இதனால்தான் சரியா புரிந்துகொள்ளாதவங்களை ‘ட்யூப் லைட்’ என்றும், புத்திசாலித்தனம் உள்ளவங்களை ‘குண்டு பல்பு’ என்றும் சொல்றாங்களோன்னு கேட்டா… சாரி, அது வேற டிபார்ட்மெண்ட்! 😂
மனித மூளையின் சுருங்கும் புதிர்:
ஆனா, உலக மூளை தினத்துல நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. தற்கால நவீன மனிதர்களோட மூளை, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சின்னதாகிவிட்டதாம்! காலப்போக்குல மனித மூளை ஏன் சுருங்குச்சுங்கிறது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராதான் இருக்குது.
விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனித மூளை:
ஒரு விஷயத்துல மனித மூளைதான் ராஜா! அது என்னன்னா, மனித மூளை ஏனைய உயிரினங்களின் மூளையைவிடப் பெரியது. இன்னும் சொல்லப்போனால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடே இந்த “பெரிய மூளை”தான் என்று கருதப்படுது. சிந்திக்கும் திறனும், கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் இருக்கிறதுனாலதான் மனித இனத்தால முதல் கலையை உருவாக்கவும், சக்கரத்தைக் கண்டுபிடிக்கவும், சந்திரனில் கால் பதிக்கவும் முடிஞ்சுது. உருவ அளவில் மனிதர்களோடு ஒத்துப்போகும் விலங்குகளோட ஒப்பிடும்போதும், மனிதர்களோட மூளைதான் மிகப்பெரியது.
பரிணாமமும் மூளையின் சுருக்கமும்:
நம்ம இனம் சிம்பன்சிகளுடன் பொதுவான மூதாதையரை பகிர்ந்துகொண்டு ஆறு மில்லியன் ஆண்டுகள் கடந்த நிலையில், மனித மூளையின் அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம், ஆய்வுகளின்படி மனித இனத்தோட மூளை அளவு ஒரு கட்டத்துக்குப் பிறகு சுருங்கத் தொடங்கியிருக்கு. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் சராசரி மூளை அளவுகள் சுருங்கிடுச்சுன்னு சொல்றாங்க. இதுவும் ஒருவித பரிணாம வளர்ச்சியின் அங்கமாக இருக்கலாம்!
மூளை ஆரோக்கியத்தைப் பேண சில வழிகள்:
-
சீரான உணவு: மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.
- வழக்கமான உடற்பயிற்சி: இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
- போதுமான தூக்கம்: மூளை தன்னை மீட்டெடுக்கவும், தகவல்களைச் செயல்படுத்தவும் தூக்கம் அத்தியாவசியம்.
- மன அழுத்த மேலாண்மை: யோகா, தியானம் போன்ற நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல்: புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, புதிர்களை விடுவிப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நடவடிக்கைகள் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.
-
சமூகத் தொடர்பு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்
எனிவே, எல்லாரும் ஹாப்பி பிரெய்ன் டே! நம்ம மூளையைப் பத்திரமா பார்த்துப்போம்! 😊
வாத்தீ அகஸ்தீஸ்வரன்



