மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்!

மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்!

ம் நாட்டில் கட்டுபாடில்லாமல் மக்கள் திரிவதால்தான் கொரோனா தொற்று குறையவில்லை என்று ஒரு சாரார் குற்றம் சொல்வதுண்டு. அதே சமயம் சட்டத்துக்கு பயப்படும் மக்களைக் கொண்ட மலேசியாவில் வரும் ஜூன் 14–ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுதான் இதற்குக் காரணம் என்பதை சுட்டிக்காட்டி இப்போ என்ன சொல்றீங்க என்று வினா எழுப்புவோர் அதிகரித்துள்ளனர்

மலேசியாவில் நேற்று 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் புதிய உச்சமாக கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என்பதால் அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமான காலக்கட்டம் என்று அந்நாட்டின் சுகாதார தலைமை இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்து இருக்கிறார். புதிய பாதிப்புகள் அதிகரிப்பை அடுத்து, மோசமான நிலையை எதிர் கொள்ள மலேசியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று டாக்டர் ஹிஷாம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நாள்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 7–ம் தேதி வரை பகுதியளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகரிப்பை அடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை 5,49,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!