மக்கள் புரட்சி நடக்கலாம்!
வீரப்ப மொய்லி சிம்பிளான ஆள். ஒளிவு மறைவு இல்லாம பேச கூடியவர். அவரோட பேட்டி:
ஆமா. காங்ரஸ்ல சீர்திருத்தம் வேணும்னு சோனியாக்கு லெட்டர் எழுதின 23 பேர்ல நானும் ஒருத்தன். கபில் சிபல் அப்பப்ப டின்னருக்கு கூப்டுவார். போவோம். சீனியர் காங்ரஸ்காரங்க ஒண்ணா கூடினா வேற எத பத்தி பேசுவோம்? கட்சிய பத்திதான். கட்சில நெறைய விஷயங்கள மாத்தணும்னு சொன்னோம். அப்டியே லெட்டரா எழுதி சோனியாக்கு அனுப்புவமே..னு கபில் கேட்டார். சரி சொன்னேன். கையெழுத்து போட்டேன். க்ரூப் ஆப் 23-னு எங்களுக்கு பேர் வச்சது ஊடக காரங்கதான். அவங்க பொழப்ப அவங்க பாக்காங்க.
எங்க லெட்டருக்கு சோனியா மரியாதை குடுத்து, சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க ஆரமிச்சாங்க. ஒவ்வொண்ணாதான் செய்ய முடியும். ஒரே நாள்ல எல்லாத்தையும் செஞ்சுற முடியாது.
கட்சிய பெட்டர் ஆக்கதுக்கு ஐடியா சொன்னோமே தவிர வீக் ஆக்றதுக்கு இல்ல. நாங்க சொன்ன யோசனை என்னாச்சு..னு கேட்டு விடாம தொந்தரவு பண்றதும் எதுவுமே நடக்கலைனு விமர்சனம் செய்றதும் தப்பு. அவங்க நோக்கம் கட்சிய பலப்படுத்றது இல்ல. வீக் ஆக்றதுதான்.
சீர் திருத்தம் செய்ய சோனியா ஆரமிச்ச உடனே எங்க லெட்டரோட நோக்கம் நிறைவேறியாச்சு. ஸோ, அந்த மேட்டர் அதோட ஓவர். இன்னும் ஜி-23 அது இதுனு பேசுறவங்க, கட்சிய காலி பண்ண நினைக்கிறாங்கனு அர்த்தம். ஜிடின் ப்ரசாதா கொஞ்சம் ஸ்ட்ராங்கா பேசினப்பவே நெனச்சேன். பிஜேபிக்கு போய்ட்டார்.
கபில் ஒரு பேமஸ் வக்கீல். எல்லா கட்சிலயும் அவருக்கு ப்ரண்ஸ் இருக்காங்க. ஒரு டின்னர்ல அவங்களையும் கபில் இன்வைட் பண்ணிருந்தார். அப்டி வந்தவங்க காங்ரஸ் நல்லா இருந்தா நாட்டுக்கு நல்லதுனு நம்புறவங்க.
இன்னிக்கு காங்ரஸ் வீக்கா இருக்கலாம். இத விட மோசமான நிலைலயும் கட்சி இருந்திருக்கு. 1977-ல மரண அடி குடுத்த அதே ஜனங்கதான் மூணே வருசத்ல இந்திராவுக்கு மறுபடி பிரதமர் பதவிய குடுத்தாங்க. இதான் காங்ரசோட வரலாறு.
பண்ணையாரா இருந்து பரதேசி ஆனவன் நிலைல காங்ரஸ் இருக்குனு சரத் பவார் சொன்னதுல எனக்கு கோபம் இல்ல. பரதேசியா இருந்தாலும் இந்தியா முழுசும் கொஞ்சமாச்சும் ஓட்டு வாங்க கூடிய சக்தி உள்ள ஒரே கட்சி காங்ரஸ்தான்னு அதே பவார்தான் சொல்லிருக்கார்.
ஒவ்வொரு எதிர்கட்சியும் ஒண்ணு ரெண்டு மாநிலத்ல ஸ்ட்ராங்கா இருக்கலாம். வீக்கா இருந்தாலும் நாடு முழுவதும் ஜனங்க ஏத்துகிட்ட ஒரே கட்சி காங்ரஸ்தான். அது இல்லாம மத்த கட்சிகள் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் பிஜேபிய வீழ்த்த முடியாது. இதையும் பவார்தான் சொன்னார்.
ப்ரசாந்த் கிஷோர் காங்ரஸ்ல சேந்தா என்ன தப்பு? கட்சில சில பேர் அத ஏன் எதிர்க்கிறாங்கனு புரியல. தேர்தல் வியூகம் வகுக்குறதுல அவர் ஒரு புலினு நிரூபிச்சிட்டார். அப்படி ஒரு ஆள் காங்ரஸ்ல சேந்து இப்டி இப்டிலாம் சேஞ்ச் பண்லாம்னு சொன்னா கட்சிக்கு லாபம்தானே. சொல்லப்போனா, உள்ளயே இருக்ற எங்கள விட வெளிய இருந்து காங்ரச பாத்த ப்ரசாந்துக்கு இன்னும் புதுசான ஐடியாக்கள் இருக்க சான்ஸ் இருக்கு.
காங்ரஸ் இல்லாத இந்தியா வேணும்னு சிலருக்கு ஆசை இருக்கலாம். அது தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா, அது சாத்தியம் இல்லாத கனவு. இந்தியாவோட அரசியல் காங்ரச சுத்தி பின்னியிருக்கு. எல்லா தரப்பு மக்களும் நம்புற கட்சி அதுதான்.
ஒரு கட்சி என்ன வேணா பேசலாம், செய்யலாம். ஆனா, ஆட்சி அரசாங்கம்னு வந்த பிறகு ஒரு மதத்துக்கு அல்லது மொழிக்கு அல்லது ஜாதிக்கு சாதகமாத்தான் செயல்படுவோம்னு சொன்னா, அதனால பலன் அடைய கூடியவங்களே ஏத்துக்க மாட்டாங்க. அரசாங்கம்னா அது எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்னு ஒரு உணர்வு ஒரு எதிர்பார்ப்பு இந்திய மக்கள் மனசுல ஊறி போயிருக்கு. அத மாத்த முடியாது.
நேரு குடும்பம் நாட்டுக்கு என்ன செஞ்சிது?னு எகத்தாளமா கேக்றவங்கள மக்களுக்கு தெரியும். அந்த குடும்பம் நாட்டுக்காக என்ன செஞ்சுது, இன்னிக்கு இந்தியா உலகத்லயே பெரிய ஜனநாயக நாடா நிக்கிதுனா அதுக்கு நேரு எந்தளவு பாடுபட்டார், இந்திராவும் ராஜிவும் எதுக்காக உயிர விட்டாங்க..னு மக்களுக்கு தெரியும். அந்த வழில வந்த சோனியாக்கு பதவி மேல அதிகாரம் மேல ஆசை கிடையாதுனும் அவங்க தெரிஞ்சிருக்காங்க. அது ஒரு தியாக பரம்பரை. ஆனா நாட்டுக்கு இத செஞ்சோம் அத செஞ்சோம்னு சொல்லி மத்தவங்க மாதிரி விளம்பரம் தேடிக்காத குடும்பம்.
இப்ப நடக்றத பாத்துகிட்டு ஜனங்க அமைதியா இருந்தா அத ஏத்துகிட்டதா அர்த்தம் இல்ல. நம்ம மக்கள் எப்பவுமே சைலன்டா புரட்சி செஞ்சிருக்காங்க. இனிமேலும் அப்டிதான் செய்வாங்க.
எந்த ஒரு கெடுதலும் ரொம்ப நாள் நீடிக்காது. நம்ம நாட்டுக்கு ஏற்பட்டிருக்ற கஷ்டமும் அப்டிதான். தீமை விலகி நல்லது நடக்கும்.