நீயா நானாவில் வில்லியான தாய்- கொஞ்சம் யோசிப்போம்!

நீயா நானாவில் வில்லியான தாய்- கொஞ்சம் யோசிப்போம்!

நீயா நானாவில் மகளின் கல்வியால் பெருமையடையும் அப்பா குறித்த வீடியோ வைரலானது. நெகிழ்ச்சியான காணொளிதான். ஆனால் அந்தப் பெண்மணி தான் பேசுவது கணவனின் சுயத்தைக் காயப்படுத்தும் என்று அறிந்ததுபோல் தெரியவில்லை. அதையும் தாண்டி பொதுவெளியில் அது தன் மீது எப்படியான ஒரு பிம்பத்தை உருவாக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. பொதுத் தளங்களில் பேசுவதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. வீட்டில் அவரைக் கிண்டல் செய்து பேசுவது போலவே பேசிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. பலரும் வீடுகளில் செய்வதுதான் இது. ஒரு வகையில் அது அவருடைய பக்குவமின்மையைத்தான் காட்டியது.

வீடியோவைப் பார்த்து திட்டிவிட்டும் கண் கலங்கிவிட்டும் நாம் அனைவரும் கலைந்து போன பிறகு இது அவர்கள் குடும்ப வாழ்க்கையில் என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்திக்க சற்று சங்கடமாக இருக்கிறது. அவர் பேசிய சில விநாடிகளில் அவர் மீது நாம் ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான பிம்பத்தை விடுத்துப் பார்த்தால் அவர் கல்வியறிவற்ற ஒருவரை மணந்து அவரோடு வாழ்ந்து வருகிறார். அந்தத் தந்தை பார்த்துப் பார்த்து மகிழும் மதிப்பெண்களை எடுத்த அந்த மகளின் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் பொதுவெளியில் வெளிப்படுத்தும் உடல்மொழி, சொற்கள் பற்றிய புரிதல் இல்லாத குற்றத்துக்காக இனி நெடுங்காலத்துக்கு அவர் இந்த சிலுவையைத் தூக்கி சுமக்க வேண்டும். இதையெல்லாம் அந்தக் குழந்தை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

ஏனெனில் இங்கே ஹீரோ அவள் தகப்பன். ஆனால் வில்லியாக்கப்படுவது அவள் தாய். இதையெல்லாம் இன்னும் நான்கு நாட்களுக்குப் பிறகு நாம் நின்று சிந்தித்துக் கொண்டிருப்போமா என்றும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு குடும்ப விஷயங்களைப் பந்தி வைத்து உற்சாகமாக உரையாடுபவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரியாலிட்டி ஷோக்கள் இது போன்ற தருணங்களுக்காகக் காத்திருக்கும். அவர்களுக்கு இது வியாபாரம். அழுகை, கண்ணீர், அவமானம் இவையெல்லாம் விற்பனைப் பொருட்கள். மக்களுக்கு அடுத்த எபிசோட் வரும்வரை இது பொழுதுபோக்கு.

ஆனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு இது வாழ்க்கை. கூட்டம் கலைந்து போன பிறகும் விடாமல் தொடர்ந்து வரும் வாழ்க்கை.

– ஷான் கருப்பசாமி

error: Content is protected !!