நிர்பயா : கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம்!

நிர்பயா : கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம்!

நம் நாட்டி தலைநகர் டெல்லியில் நடந்தாலும் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அது. கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றபோது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து (டிசம்பர் 29) அவர் மரணம் அடைந்தார். இந்த கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த கொடூர சம்பவத்தில், கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர்.இவர்களில் ராம்சிங், திகார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

ஆனாலும் ‘நிர்பயா’ வழக்கை விரைவு கோர்ட்டு துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவன் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான்.முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் 2014-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட் 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன. அதன்பின்னர் 4 பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும், சட்டத்தின் மீது பெண்களுக்கான நம்பிக்கையை இந்த உத்தரவு ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.இதற்கிடையே, தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் 4 குற்றவாளிகளும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டால், 4 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Related Posts

error: Content is protected !!