இந்த புவி வெப்பமயமாதல் என்பதே ஏமாற்று வேலையோ?

இந்த புவி வெப்பமயமாதல் என்பதே ஏமாற்று வேலையோ?

னக்கு சில விஷயங்கள் புரியவில்லை. ஒவ்வொரு பெருமழையின் போதும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் தவறாமல் சிலர் சொல்கிறார்கள். குறிப்பாக இயற்கை ஆர்வலர்கள். முதலில் மிக தீவிரமாக நம்பினேன்… ஆனால், இப்போது குழப்பமாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக, விவசாயம் செய்வதன் காரணமாக, அன்றாடம் வானிலை செய்திகளையும் அதனையொட்டிய நிகழ்வுகளையும் கவனிக்க தொடங்கிய பின் ஏற்பட்ட குழப்பம் இது.

“புவி வெப்பமயமாதலால் தான் இப்படி… பருவம் தப்பிய வறட்சி அல்லது அதிகனமழைகள் தான் இனி…” என்பதை அடிக்கடி கேட்கிறேன் படிக்கிறேன். அப்படியானால், இந்த அதிகனமழை என்பது முன்பெல்லாம் இல்லை, இப்போது சமீப வருடங்களாகத்தான் என்றுதானே அர்த்தம். ஆனால், கடந்த 17ஆம் தேதி காயல்பட்டினத்தில் பெய்துள்ள 95 செமீ மழையைவிட அதிகமாக 31 வருடங்களுக்கு முன்பு காக்காச்சியில் 1992 நவம்பரில் 96.5 செமீ மழை பதிவாகியுள்ள விவரத்தை பார்க்க முடிகிறது. இதுபோல் இடையிடையேயும் பல அதிகனமழை பதிவுகள் இருக்கிறது. 2023 சென்னை பெருமழையைவிட 2015 சென்னை பெருமழை பெரியது என்கிறார்கள்.

சரி, 1992இலேயே புவி வெப்பமயமாதல் தொடங்கிவிட்டது என்று எடுத்துக்கொண்டால் அதற்கு முன்பு?

நம்மிடம் 100, 200 வருடங்களுக்கு மேலே மழைப் பதிவுகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஆறுகள் இருக்கிறது. அதன் அகலத்தை வைத்து முற்காலங்களில் எவ்வளவு தண்ணீர் ஓடியிருக்கும் என்று கணிக்கலாம். ஆறுகள் இவ்வளவு அகலமாக இருந்தால், அவ்வளவு தண்ணீர் ஓடியிருந்தால், இதுபோல் அதி கனமழைகள் அப்போதும் பெய்திருக்க வேண்டும்தானே. நம்மிடம் முறையான ஆவணப்படுத்தல்கள் இல்லாததால்தான், விவரமில்லாமல் இப்போது பெய்யும் மழைதான் வரலாற்றிலேயே அதிகம் என்கிறோமோ என்னவோ.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல். நினோ விளைவு காரணமாக இந்தியாவில் கடும் வறட்சி நிலவும் என்கிற விதமாக நிறைய கட்டுரைகள் வெளியாகியின. நானும் அதனை நம்பி பலரிடமும் சொல்லி வந்தேன். நண்பர்கள், உறவினர்களிடம் சாகுபடியை குறைக்கச் சொன்னேன். ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் வரலாறு காணாத மழை. இதுபோல் சில ஆண்டுகளுக்கு முன்பும் எல். நினோ என்னை ஏமாற்றியது.

2021இல் பொங்கலை ஒட்டி மழை பெய்தது. “அது மழை கருக்காலம். கரு கலைந்துவிட்டது. எனவே, இந்த ஆண்டு மழை குறைவுதான்” என்று இயற்கை ஆர்வலர்கள், மரபு வழி மழை கணிப்பாளர்கள் பலரும் எழுதினார்கள். வழக்கம்போல் நான் தயாரானேன். ஆனால், அந்த ஆண்டும் மழை வெளுத்து வாங்கியது. அந்த வருடம் பெய்த மழையால் தான் எங்கள் ஊர் பக்கம் 2022இல் மழை இல்லாமலும் இப்போது வரை தாக்கு பிடித்தது. எனக்கு இந்த புவி வெப்பமயமாதல் என்பதே ஏமாற்று வேலையோ என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது.

தளவாய் சுந்தரம்

error: Content is protected !!