ஆறுமுகசாமி நடத்தும் ஆணையத்திற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பின. அவர் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னரே இறந்துவிட்டார் எனவும், மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே அவர் சுய நினைவு இல்லாமல் இருந்தார் எனவும் பலவாறு கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பைக் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். 3 மாத காலத்தில் விசாரணையை முடிக்க ஆணையத்துக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.
சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கான அலுவலகத்தில் தனது விசாரணையை ஆறுமுகசாமி தொடங்கினார். ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், தீபக், திமுக சார்பில் மருத்துவர் சரவணன், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் , மருத்துவர் தினேஷ் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
விசாரணை ஆணையத்தின் காலம் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், சசிகலா, அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி, அவரது மகள் ப்ரிதா ரெட்டி உள்ளிட்டோருக்கு விசாரணை ஆணையம் நேற்று(டிசம்பர் 22) சம்மன் அனுப்பியது. 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் என கருதப்பட்டது. இந்நிலையில், விசாரணை ஆணையத்துக்கு மேலும் ஆறு மாதம் கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 25 வரை விசாரணை ஆணையம் செயல்படும்.