ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்- மலேசிய பிரதமர் அறிவிப்பு!

ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்-  மலேசிய பிரதமர் அறிவிப்பு!

நம் நாட்டின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என மலேசிய பிரதமர் மஹதீர் முகமது இன்று அறிவித்தார்.

இந்திய இளைஞர்களை தன் பேச்சுக்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தூண்டியதாக இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக அவர் நடத்தி வந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.இந்நிலையில் ஜாகீர் நாயக் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க மலேசியா தப்பி சென்றார். அவரிடம் மலேசிய குடியுரிமை உள்ளது.

ஜாகீர் நாயக்கை நாடு கடத்தும்படி கடந்த ஜனவரி மாதம் மலேசிய அரசிடம் இந்தியா கோரிக்கை முன்வைத்தது.

இந்தியா – மலேசியா இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனாலும் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என மலேசிய பிரதமர் மஹதீர் முகமது இன்று அறிவித்தார்.

‘‘ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றவர். எனவே மலேசியாவில் அவர் சட்டத்தை மீறி எந்த பிரச்சனையிலும் ஈடுபடாத வரை இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த முடியாது’’ என செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மஹதீர் முகமது கூறினார்.

இதன் மூலம் ஜாகீர் நாயக் இந்தியாவிடம் விரைவில் ஒப்படைக்கப்படுவார் என எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் தன் மீதான பொய் வழக்குகள் திரும்ப பெறப்படும் வரை இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என ஜாகீர் நாயக் முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!