உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்: நீரின் அவசியமும், பாதுகாப்பும்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி, உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (World Water Monitoring Day) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உள்ளூர் நீர்நிலைகளின் தரத்தை சோதித்து, அவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் க்ளீன் வாட்டர் ஃபவுண்டேஷன் (Clean Water Foundation) அமைப்பு, 2003 ஆம் ஆண்டு இந்த தினத்தை அறிவித்தது. இது தண்ணீரின் முக்கியத்துவத்தையும், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் உணர்த்துகிறது.
நீரின் அத்தியாவசியம்
நீர் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் எந்த உயிரினமும் நீரில்லாமல் வாழ முடியாது. அறிவியல் கூற்றுப்படி, நமது பூமியின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. அதேபோல, மனித உடலின் பெரும்பகுதியும் நீரால் ஆனது. ஆறு, ஏரி, குளம், நதி போன்ற பல்வேறு நீர்நிலைகளில் இருந்து நாம் தண்ணீரைப் பெறுகிறோம்.

நீர் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்வுக்கும் அடிப்படையாக அமைகிறது. தினசரி வாழ்வில், குளிப்பது, சமைப்பது, பாத்திரங்கள் மற்றும் வாகனங்களைக் கழுவுவது போன்ற பல்வேறு தேவைகளுக்கு நீர் இன்றியமையாதது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இது உடலின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
விவசாயத்திற்கு நீர் மிகவும் இன்றியமையாதது. பயிர்கள் வளரவும், உணவு உற்பத்தி செய்யவும் தண்ணீர் அவசியம். அதேபோல, மின்சார உற்பத்திக்கும், குறிப்பாக நீர்மின் திட்டங்களுக்கும் நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது.
போக்குவரத்து மற்றும் நாகரீக வளர்ச்சியில் நீரின் பங்கு
பண்டைய காலம் தொட்டு இன்று வரை, போக்குவரத்து வசதிகளில் நீர் ஒரு முக்கிய ஊடகமாக இருந்து வருகிறது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லாத பல இடங்களில், படகுப் போக்குவரத்து இன்றும் போக்குவரத்திற்கு உதவுகிறது. நீர்வழிகள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் முக்கிய மையங்களாக நீண்ட காலமாக விளங்கி வருகின்றன. இதன் மூலம், நீர் மனிதர்களின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத அங்கமாக கலந்துவிட்டது.
நீர் பாதுகாப்பு: நம் ஒவ்வொருவரின் கடமை
உலக தண்ணீர் கண்காணிப்பு தினத்தின் முக்கிய நோக்கம், நீர் வளங்களைப் பாதுகாப்பது மற்றும் பெருக்குவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும். நீர் மாசுபடுவதைத் தடுப்பதன் மூலம், எதிர்கால சந்ததியினரின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முடியும். மேலும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதிப்பதன் மூலம் அதன் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இந்த நாளில், நாம் அனைவரும் நீரின் அவசியத்தை உணர்ந்து, அதை வீணாக்காமல் சேமிக்க உறுதியெடுக்க வேண்டும். ஒவ்வொரு துளி நீரையும் பாதுகாப்பது, இந்த பூமி மற்றும் அதன் உயிரினங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். இந்த விழிப்புணர்வு நாள், நீர் பாதுகாப்பில் நம் ஒவ்வொருவரின் பங்கையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
நீரின்றி அமையாது உலகு! நீரை சேமிப்போம், வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
நிலவளம் ரெங்கராஜன்


