32°C
விளம்பரம்
Advertisement

உலக எலும்புப்புரை தினம்: எலும்புகளின் ஆரோக்கியமும் தடுக்கும் முறைகளும்!

admin சேலம் Published: October 20, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



மனித உடலுக்கு உறுதியான வடிவத்தையும் இயங்குவதற்குக் தேவையான ஆற்றலையும் தருவது எலும்புக்கூடு அமைப்பாகும். ஆனால் வயது அதிகரிக்கும் போதோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போதோ எலும்புகள் தங்களின் அடர்த்தியையும் பலத்தையும் இழக்கத் தொடங்குகின்றன. இந்த நிலையைத் தான் எலும்புப்புரை நோய் அல்லது ஆஸ்டியோபோராசிஸ் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 ஆம் தேதி உலக எலும்புப்புரை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், இந்த மெளனமான பாதிப்பிலிருந்து மனித குலத்தைப் பாதுகாப்பதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

வரலாறும் அமைப்பும்

எலும்புப்புரை நோய் குறித்த விழிப்புணர்வை உலகளவில் பரப்பும் நோக்கத்தோடு 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய எலும்புப்புரை கழகத்தால் இத்தினம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளை இந்நாளை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

2026 ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மையக்கருத்து

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான உலக எலும்புப்புரை தினத்தின் கருப்பொருள்:

வாழ்நாள் முழுவதும் எலும்புகளை உருவாக்கி, பாதுகாத்து, வலுப்படுத்துங்கள்.

சிறுவயது முதலே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதும், வயது முதிர்வில் அவற்றின் பலத்தைப் பாதுகாப்பதும், முறையான வாழ்க்கை முறையின் மூலம் எலும்புகளை வலுப்படுத்துவதும் எவ்வளவு அவசியம் என்பதை இந்த மையக்கருத்து வலியுறுத்துகிறது.

மெளன நோய் என்னும் அச்சம்

எலும்புப்புரை நோய் பொதுவாக எந்தவித வெளிப்படையான முன் அறிகுறிகளையும் காட்டுவதில்லை. எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து, ஏதேனும் ஒரு சிறிய தடுமாற்றத்திலோ அல்லது லேசான அடிபடும்போதோ எலும்பு முறிவு ஏற்படும் வரை இந்நோய் இருப்பு வெளியே தெரிவதில்லை. எனவேதான் மருத்துவர்கள் இதனை மெளன நோய் என்றும், மனித இனத்தை அச்சத்திற்கு உள்ளாக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.

பெண்களும் எலும்புப்புரை நோயும்

இந்த நோயின் தாக்கம் ஆண்களை விட பெண்களிடமே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்நோயின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது. ஆய்வுகளின்படி, இந்தியாவில் மாதவிடாய் நின்ற பெண்களில் 50 சதவீதம் பேர் எலும்புப்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நிற்கும் காலத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு கணிசமாகக் குறைகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் எலும்புகளின் அடர்த்தியையும் வலிமையையும் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் வீழ்ச்சி காரணமாக எலும்புத் திசுக்கள் வேகமாகக் சிதைவடைந்து, எலும்புகள் அடர்த்தி இழந்து தேய்மானமடைகின்றன.

பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள்

எலும்புப்புரை நோய் தீவிரமடைும்போது உடலின் முக்கியப் பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முதுகெலும்பு கூன் விழுதல் மற்றும் உயரம் குறைதல்.

கடுமையான முதுகு வலி மற்றும் இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி.
லேசான அழுத்தத்திற்கோ அல்லது கீழே விழுவதற்கோ இடுப்பு எலும்பு, மணிக்கட்டு மற்றும் தண்டுவட எலும்புகள் எளிதில் முறிவடைதல்.

இத்தகைய எலும்பு முறிவுகள் முதியோரின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, அவர்களை நிரந்தரமாகப் படுக்கையில் முடக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன.

எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள்

எலும்புப்புரை நோயைத் தடுப்பதற்கும், எலும்புகளின் அடர்த்தியை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதற்கும் சில முக்கிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள்: பாலாடைக்கட்டி, பால், தயிர், கீரை வகைகள், நட்ஸ், எள் மற்றும் மீன் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்க அதிகாலை சூரிய ஒளியில் சில நிமிடங்கள் நிற்பது நல்லது.

உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம்: எலும்புகளுக்கு வலுவூட்டும் நடைப்பயிற்சி, ஓட்டம், எடைகளை உயர்த்தும் பயிற்சிகள் மற்றும் யோகாசனம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். இது தசைகளையும் எலும்புகளையும் ஒரே நேரத்தில் வலுப்படுத்தும்.

தீய பழக்கங்களைத் தவிர்த்தல்: புகையிலை பயன்பாடு மற்றும் மது அருந்துதல் போன்றவை எலும்புகளின் கால்சியம் உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன. எனவே இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முறையான மருத்துவப் பரிசோதனை: 45 வயதைக் கடந்த பெண்களும் முதியவர்களும் எலும்பு அடர்த்தி பரிசோதனை (டெக்ஸா ஸ்கேன்) செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் எலும்பின் தற்போதைய அடர்த்தியைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சைகளைத் தொடங்க முடியும்.

மொத்தத்தில் எலும்புகளும் தசைகளும் தான் மனித உடலின் இயங்குமுறைக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மக்கள் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதோடு, எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை வழங்கி வரும் மருத்துவர்களையும் சுகாதார அதிகாரிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக இந்நாள் அமைகிறது. சரியான உணவு முறை, சீரான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் எலும்புப்புரை நோயை ஆரம்பத்திலேயே தடுத்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உறுதியேற்போம்.

செந்தில் வசந்த்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்