உ;லக கடிதம் எழுதும் நாள்!

உ;லக கடிதம் எழுதும் நாள்!

ப்போதெல்லாம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, உலகில் எந்த மூலை நமக்குப் பிடித்த உறவுகள் இருந்தாலும் அவர்களுடன் நிகழ் நேரத்தில் நம்மால் காணொலி அழைப்பு வழியாக அவர்களது உருவத்தை செயல்திறன் பேசியிலும் கணினித் திரைவழியாகவும் பார்த்தபடி பேசமுடிகிறது. அவ்வளவு ஏன், நம் மணிக்கட்டில் செயல்திறன் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டால் அந்தக் குறுந்திரை வழியாகவே நாம் காண முடிகிறது. ஆனால் ஒரு கடிதமும், அதில் பதிவான கையெழுத்துக்களும் தரும் உயிர்ப்பும், உணர்வும் தனியானவை. பெருந் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை கடிதங்கள் மூலம் பரிமாறிக் கொண்ட உணர்வுகளும், உறவுகளும் ஒப்பற்றவை.திருமுகம், மடல், கடுதாசி, காயிதம், முடங்கல் ,அஞ்சல், தபால், கடிதாசி, லிகிதம், எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் கடிதம் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த காலம் ஒன்று உண்டு.மன்னர்கள் விட்ட தூதுகள், காந்தியைச் செதுக்கிய டால்ஸ்டாய் கடிதங்கள், மகளுக்குத் தந்தை எழுதிய நேருவின் கடி தங்கள், தம்பிக்கு எழுதிய அண்ணாவின் கடிதங்கள், உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் எனப் பலவகைக் கடிதங்கள் உண்டு என்றாலும் ஒருவர் மனதை இன்னொருவர் அறிய எழுதப்பட்டகடிதங்கள்தான் எவ்வளவு இன்பமானவை! வரலாறு நெடுகிலும் கடிதங்கள் வழியாக ஊழல் வெளிவந்ததும், போர்களின் போக்கு மாறியதும், சமூக இயக்கங்களின் எழுச்சியும் நடந்துள்ளன. பிரிட்டன் ராணியின் மரண தண்டனைக்கு வழிவகுத்ததும், அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கும் பாதையில் பயணிக்க தொடங்கியதும் ஒரு கடிதத்தின் வழியாகவே நடந்தது.

ஆம்.. . ‘நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம், அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்’ எனத் தன் எண்ணத்தை எல்லாம் கொட்டிக் காதல் கடிதங்கள் எழுதப்பட்டன. ஒருதலைக் காதலைச் சொல்வதற்கான ஒரே ஊடகமாக இருந்தது கடிதம்தான். பெயர் போட்டு எழுதிய கடிதம், பெயர் போடாமல் எழுதிய ‘மொட்டைக் கடிதம்’, காதலியின் அண்ணனிடம் அடி வாங்கிக் கொடுத்த கடிதம், தலைமை ஆசிரியரின் கையில் சிக்கியதால் காதலைச் சின்னாபின்னமாக்கிய கடிதம் என ஒருதலைக் காதலைச் சொன்ன கடிதங்கள் உண்டு.காதலர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு இன்னொருவர் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் உண்டு. வீட்டுக்குக் கடிதம் எழுத முடியாமல், பொது நண்பர்கள் மூலம் பரிமாறப்பட்டகடிதங்களும் உண்டு.

அஞ்சல் அட்டை, இன்லேண்ட், கவர், ஏர் மெயில் எனப் பலவகை இருந்தாலும், குடும்பங்களுக்குள் இன்லேண்ட்தான் பெரும் புழக்கத்திலிருந்தது.தபால்காரரின் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார்கள். சிலர் ஒன்பது மணிக்குத் தபால் நிலையம் போய்க்கூடக் காத்துக் கிடப்பார்கள். ‘ஒருவர் மனதை இன்னொருவர் அறிய உதவும் சேவை இது’ என ‘கௌரி கல்யாணம்’ திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அப்படித்தான் அனைத்துத் தபால்காரர்களும் பார்க்கப்பட்டார்கள். படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசித்துக் கொடுக்கும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது.

கடிதம் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு தெருவிலும் குறிப்பிட்ட இடம் வரும்போது தபால்காரர் மணி அடிப்பார். அவரின் வருகையை அறிவிக்கும் அந்த சைக்கிள் மணியோசைக்குத்தான் எவ்வளவு வரவேற்பு! வீட்டினுள் இருந்து அனைவரும் வாசல் நோக்கிப் புறப்படுவர். தபால்காரர் உள்ளே இருந்து வந்து கொண்டிருப்பவர்களைத் தன் சைக்கிளிலிருந்தவாறே பார்த்துச் சிரித்துக் கொண்டே , “நாளை தருகிறேன்” என்பார். ‘போஸ்ட்’, ‘அம்மா’ என ஒவ்வொரு தபால்காரரும் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பார். லாவகமாக வீசிச் செல்வார். மணியார்டர் என்றால் மட்டும் நின்று கொடுப்பார். பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால் கடிதம் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் எழுச்சி மிகு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். கடிதம் எழுதுதல் என்பது ஒரு தனிக்கலை. கடிதம் தகவல் பரிமாற்றத்திற்கான களம்.ஒருவர் பிறரிடம் நேரடியாகப் பேச முடியாத சூழல் உருவாகும் போது உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளை வார்த்தைகள் மூலம் புலப்படுத்தும் முறைமையாக கடிதங்கள் கருதப்படுகின்றன. கடிதங்கள் இரு தனிநபர்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. இது எழுத்து வடிவிலான உணர்வுப் பரிமாற்றம். இல்லை. உறவுப் பரிமாற்றம்.தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், வணிகக் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள் எனக் கடிதங்கள் பல வகைப்பட்டாலும் ஒவ்வொன்றும் ஒருவித ஆழமான, அழகான கருத்தினை வெளிப்படுத்துபவை. கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது. இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன. ஆக., மனித வாழ்வின் சாட்சியாகத் திகழும் கடிதங்கள் வாழ்க்கையை, காலத்தைப் பதிவு செய்கின்றன. எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையிடம் எழுதும் வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கம்

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts