உலக அல்சைமர் தினம்: மறதி நோய்க்கு ஒரு விழிப்புணர்வு!

உலக அல்சைமர் தினம்: மறதி நோய்க்கு ஒரு விழிப்புணர்வு!

வ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி, உலகம் முழுவதும் ‘உலக மறதி நோய் தினம்’ அல்லது World Alzheimer’s Day அனுசரிக்கப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் இந்த அல்சைமர் நோய் (Alzheimer’s disease) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்துபோவது, நெருங்கிய உறவினர்களின் பெயரைக் கூட சரியாகச் சொல்ல முடியாமல் திணறுவது, ஏன் சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலையையே மறந்துவிட்டு வேறு காரியங்களில் ஈடுபடுவது போன்ற அறிகுறிகள் அல்சைமர் நோயின் வெளிப்பாடாக இருக்கலாம்.

அல்சைமர் என்றால் என்ன?

அல்சைமர் என்பது வயதானவர்களுக்கு வரும் `டிமென்ஷியா’ (Dementia) என்ற பெரிய மறதி நோயின் ஒரு முக்கிய வடிவம். இந்த பாதிப்பு உள்ளவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்களே. இது பொதுவாக 60-65 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படுகிறது. வயதாகும்போது, மூளையின் செல்கள் படிப்படியாகச் சிதைக்கப்படுவதால், இந்த நோய் உண்டாகிறது. இதனால் நினைவாற்றல் குறைபாடு, குழப்பமான மனநிலை, மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் போன்றவை நிகழ்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர். அலோயிஸ் அல்சைமர் (Alois Alzheimer) என்பவர், 1906 ஆம் ஆண்டு இந்த நோயை முதன்முதலில் தெளிவாக விளக்கினார். அதன்பிறகே, வயோதிகத்தால் ஏற்படும் இந்த மறதி நோய், ‘அல்சைமர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு பொருளை சில நிமிடங்களுக்கு முன்புதான் வைத்திருப்பார்கள், ஆனால் அதை எங்கு வைத்தோம் என்று யோசிப்பதில் சிரமம் ஏற்படும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்ற நெருங்கிய உறவுகளின் பெயர்களும் நினைவுக்கு வராமல் போகலாம்.

அல்சைமர் நோயின் அறிகுறிகள்

  • புதிதாகக் கற்றுக்கொண்ட விஷயங்களை மறந்துவிடுதல்.
  • தினசரி வேலைகளைச் செய்வதில் சிரமம்.
  • பேசும்போது சரியான வார்த்தைகளைத் தேடுவது.
  • ஆரம்பத்தில் சாதாரண மறதியாகத் தோன்றும் இது, மெதுவாக நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றம் மற்றும் உடல் செயல் இழப்பு எனப் பல நிலைகளைக் கடந்து செல்லும்.

உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது இதன் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயின் தாக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.

அல்சைமர் நோயாளிகளைப் பராமரிப்பது எப்படி?

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு குழந்தையைப் போலத்தான் கருத வேண்டும். அவர்களுக்கு இது ஒரு நோய் என உணர்த்தாமல், அன்போடும் பொறுமையோடும் நடந்துகொள்ள வேண்டும்.

  • அடையாளம்: ஒவ்வொரு முறை பேசும்போதும், உங்களது பெயரை அறிமுகப்படுத்திக்கொள்வது அவசியம்.
  • மனம்விட்டுப் பேசுதல்: அவர்களைத் தனிமையில் விடாமல், முடிந்தவரை மனம்விட்டுப் பேச வேண்டும்.
  • மனஅழுத்தம் குறைப்பு: நீண்ட நேரம் சிந்திக்கும்படியான நினைவுகளைப் பேசுவதைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, சில விஷயங்களைச் சைகைகள் மூலம் குறிப்பால் உணர்த்தலாம்.
  • புரிந்துகொள்ளுதல்: அவர்களின் நடத்தைகள் மாறும்போது பதற்றப்படாமல், அது நோயின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொண்டு அணுகுவது அவசியம்.

இளம் வயதில் ஏற்படும் மறதியை அல்சைமர் நோயுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆனால், வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி, சாதாரணமாகத் தெரியாமல், உரிய கவனம் கொடுத்து அணுகப்பட வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புறந்தள்ளாமல், ஆதரவாக இருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கலாம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!