பல வடிவங்களில் வந்து விட்ட பணிச்சூழல் சுட்டிகள்!

பல வடிவங்களில் வந்து விட்ட பணிச்சூழல் சுட்டிகள்!

செய்யும் வேலைக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்துவது வேலையை எளிதாக முடிக்க உதவுவதோடு, உடல்நலனையும் காக்கும். தொடர்ந்து கணினியைப் பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் உடல் நலச் சிக்கல்களில் முதுகுவலியும் கழுத்துவலியும்தாம் முதன்மையாகப் பேசப்படும். கைகளும் கடுமையாக பாதிக்கப்படும்படியான.சில கணினி வேலைகள் இருக்கின்றன. அவர்களுக்கு உதவ உருவானவைதாம் பணிச்சூழல் சுட்டிகள் (Ergonomic Mouse).

கணினிப் பயன்பாட்டாளர்கள் சிலருக்கு விசைப்பலகை மட்டுமே போதும். மவுஸ் எனப்படும் கணினிச் சுட்டியைத் தொடக்கூடமாட்டார்கள். சுட்டி மூலம் செய்யக்கூடிய அனைத்தையும் தட்டச்சுக்கருவியின் மூலமே செய்ய பல குறுக்குவழிகள் வைத்திருப்பார்கள். இயங்குதளங்களும், செயலிகளும் இதற்கு ஒத்துழைக்கும். செல்லினத்தில் தமிழில் எழுதிக்கொண்டிருக்கும்போது இடையில் ஆங்கிலம் வேண்டுமானால் அதற்கென்று இருக்கும் ஒரு விசையைத் தட்டினால் போதும்.

ஆனால், கட்டடக்கலை, கணினி விளையாட்டு, வரைபடம், வரைகலை எனப் பல துறைகளில் கணினிச் சுட்டியை நுணுக்கமாகவும் நீண்ட நேரமும் பயன்படுத்தும் தேவை உள்ளது. நீண்ட நேரம் கணினிச் சுட்டியைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் பணியில் இருப்போருக்கு வழக்கமான வடிவம் நிச்சயம் தொல்லை. கை மணிக்கட்டில் வலி, விரல்களில் வலி எனத் தொடங்கி தோள், கழுத்து எனப் பரவி இம்சிக்கும். இவர்களுக்கென்றே தனித்துவமான பணிச்சூழல் சுட்டிகள் இருக்கின்றன.

முகம் சிறுத்து உடல் பெருத்து வாலுடன் எலியைப் போல இருப்பதாலேயே மவுஸ் எனப் பெயரிட்டனர். நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த வடிவம் ஏற்றதல்ல. நசுங்கிப் போன கொழுக்கட்டை மாதிரியோ, முதுகு வீங்கிய கிளிஞ்சில் போலவோ, துணிகளின் சுருக்கம் நீக்கும் சூடுபெட்டியைப் போலவோ பல வடிவங்களில் கணினிச்சுட்டிகள் உள்ளன. பிள்ளையாருக்குப் பக்கத்தில் லட்டைத் தூக்கிவைத்துக் கொண்டு நிற்கும் எலி மாதிரி சுட்டியின் சக்கரத்தை மட்டும் தூக்கிவைத்திருக்கும் வடிவத்தில் கூட உள்ளன. அவரவர் பணிச்சூழலுக்கு ஏற்றவகையில் தேர்ந்தெடுக்க ஏராளமான வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.

இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள், கையின் அளவில் மாறுபாடு இருப்பவர்களுக்கும் தங்களுடைய உட்கார்ந்திருக்கும் சுட்டி உதவும் என்கிறது லாகிடெக். இவ்வகைச் சுட்டிகளின் விலை பல ஆயிரங்களில் இருந்தாலும் லாகிடெக் நிறுவனத்தினுடையது ஓரளவுக்கு வாங்கக்கூடிய விலையில் இருக்கும். தரமானவையும் கூட. மைக்ரோசாப்ட், கென்ஸிங்டன், ஸ்விட்பாயின்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் சுட்டிகளும் சந்தையில் உள்ளன. சிஎன்என் கட்டுரை ஒன்று இம்மாதிரி சுட்டிகளை ஒப்பிட்டு விரிவாக அலசியுள்ளது. தேவை இருப்போர் படித்துப் பார்த்து வாங்க ஏதுவாக இருக்கும்.

கோகிலா பாபு

error: Content is protected !!