மகரவிளக்கு பூஜையன்று பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம்- தேவசம் போர்டு அறிவுறுத்தல்!

மகரவிளக்கு பூஜையன்று பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம்-  தேவசம் போர்டு அறிவுறுத்தல்!

பரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்குப் பூஜையின் போது, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரவேண்டாம், என தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் ஜனவரி 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கூடுதலாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த 5 தினங்களும் அவர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடத்த 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31ஆம் தேதி நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல், பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் 18ஆம் படியேறி, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். எனினும், ஒரு சில பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் அடிவாரத்தில் உள்ள பம்பையிலே தங்களது விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் எரிமேலி , நிலக்கல் பம்பை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.பக்தர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், 94460 37100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனுமதி இல்லை

மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும். வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல – மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும்.

error: Content is protected !!