ஏஐ நிறுவனங்களிடம் கல்லா கட்டும் விக்கிப்பீடியா: இனி தகவல்களுக்குப் பணம்!

ஏஐ நிறுவனங்களிடம் கல்லா கட்டும் விக்கிப்பீடியா: இனி தகவல்களுக்குப் பணம்!

விக்கிப்பீடியா (Wikipedia) என்பது உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பலத்தரப்பட்ட தகவல் அறிவை இலவசமாக கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைக்களஞ்சியம். சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில், 65 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்தத் தளம், முற்றிலும் தன்னார்வலர்களால் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு வருகிறது. விளம்பரங்கள் இன்றி, வாசகர்களின் நன்கொடைகளை மட்டுமே நம்பி இயங்கும் இந்த லாப நோக்கற்ற அமைப்பு, கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தின் ‘நம்பகமான தகவல் ஊற்றாக’த் திகழ்கிறது. இச்சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களுக்குப் பயிற்சி அளிக்க விக்கிப்பீடியாவின் தரவுகளை இலவசமாகப் பயன்படுத்தி வந்த நிலைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமேசான், மெட்டா, மைக்ரோசாஃப்ட், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) மற்றும் மிஸ்ட்ரல் ஏஐ (Mistral AI) ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் விக்கிப்பீடியா அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், இனி இந்த நிறுவனங்கள் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை அதிவேகமாக அணுகுவதற்கு (API Access) கட்டணம் செலுத்த வேண்டும். 2022-ல் கூகுள் நிறுவனம் இத்தகைய ஒப்பந்தத்தில் இணைந்த முதல் பெரிய நிறுவனமாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்தத் திடீர் கட்டண முறை?

விக்கிப்பீடியா இத்தனை காலம் இலவசமாகத் தந்த தரவுகளுக்கு இப்போது கட்டணம் வசூலிப்பதன் பின்னணியில் பல முக்கியக் காரணங்கள் உள்ளன:

  1. குறைந்து வரும் வாசகர் எண்ணிக்கை: ஏஐ சாட்போட்கள் (AI Chatbots) மற்றும் கூகுளின் ஏஐ தேடல் முடிவுகள், விக்கிப்பீடியாவிலிருந்து தகவல்களைத் திரட்டி நேரடியாகப் பதிலைத் தருகின்றன. இதனால் வாசகர்கள் விக்கிப்பீடியா தளத்திற்குள் செல்வது 8 சதவீதம் குறைந்துள்ளது. இது விக்கிப்பீடியாவின் நன்கொடை மாடலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

  2. கட்டமைப்புச் செலவுகள் (Infrastructure Costs): ஏஐ நிறுவனங்கள் தகவல்களைத் திரட்ட (Scraping) விக்கிப்பீடியாவின் சர்வர்களைப் பயன்படுத்தும்போது, அந்தச் சுமை விக்கிப்பீடியாவின் செலவுகளை அதிகரிக்கிறது. “பெரிய நிறுவனங்களின் சுமையை நாங்கள் ஏன் தாங்க வேண்டும்?” என்ற ரீதியில் விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  3. விக்கிமீடியா என்டர்பிரைஸ் (Wikimedia Enterprise): வணிக நிறுவனங்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தின் மூலம், தரவுகளை அதிவேகமாகவும், கட்டமைக்கப்பட்ட முறையிலும் (Machine-readable format) நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு பிறந்தநாள் பரிசு

விக்கிப்பீடியாவின் 25-வது பிறந்தநாளை முன்னிட்டு, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) நிறுவனம் ஒரு சுவாரசியமான பரிசை வழங்கியுள்ளது. விக்கிப்பீடியாவில் தன்னார்வத் தொண்டு செய்யும் 2,500 எடிட்டர்களுக்கு (Editors) தனது ‘என்டர்பிரைஸ்’ சேவையை இலவசமாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எடிட்டர்களின் உழைப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இணையத்தில் தகவல்கள் சிதறிக் கிடக்கும் சூழலில், விக்கிப்பீடியா ஒரு நம்பகமான கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது. ஏஐ நிறுவனங்கள் இத்தகைய தளங்களுக்குக் கட்டணம் செலுத்துவது என்பது வெறும் வணிக ஒப்பந்தம் மட்டுமல்ல; அது ஒரு சுதந்திரமான அறிவுத் தளம் நிலைத்து நிற்பதற்கான நீதியும்கூட.

ஈஸ்வர் பிரசாத்

Related Posts

error: Content is protected !!