அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் எதைக் காட்டுகிறது? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் எதைக் காட்டுகிறது? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

”அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தவை மன வருத்தம் தருகின்றன. முறையான, அமைதியான விதத்தில் அதிகார மாற்றம் தொடர்ந்து நிகழ வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்களால் ஜனநாயக வழிமுறைகள் வீழ்ச்சியடைய அனுமதிக்கக்கூடாது” – இப்படிச் சொன்னது நமது பிரதமர் மோடி. அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் கலவரம் என்பதும், அதுவும் அதிபர் ஒருவரே அத்தகைய கலவரத்திற்குக் காரணமாக இருந்ததும் கரும் புள்ளியாக அமைந்து விட்டது.

உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் தன்னை முன் வைக்கும் அமெரிக்கா இன்று இன ரீதியான பிளவுகளுக்குள் விரும்பியோ, விரும்பாமலோ உள் நுழைந்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதில் டிரம்பின் ஆதரவாளர்களில் கருப்பர்களும், ஏன் இந்திய தேசியக் கொடியேந்திய ஒரு அடையாளம் தெரியாத நபரும் அடங்குவர். பெரும்பாலும் வெள்ளை யினத்தவர் நிறைந்த அக்கூட்டம் டிரம்பை தங்களது ரட்சகராகப் பார்த்தக் கூட்டம் என்று தெரிகிறது. ஏன் டிரம்பினால் இது நாள் வரை எந்த அதிபரும் செய்ய நினைக்காத ஒன்றைச் செய்யத் தூண்டுகிறது? பணமா?, மறைமுக ஆதரவா? மக்கள் ஆதரவா? வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலா? எல்லாமேவா?

டிரம்ப் பதவிக்கு வந்ததே சர்ச்சையாகி நாடாளுமன்ற விசாரணை வரை வந்தது. நேரடியாக டிரம்ப் ரஷ்யத் தொடர்புகளுடன் இல்லை என்று சொன்னாலும் அவரது பணியாளர்கள் சிலர் ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்தனர் என்பது உறுதியானது. கடந்த அதிபர் தேர்தலில் 306 எலக்டோரல் வாக்குகள் பெற்று அதிபரானார் டிரம்ப். இம்முறை அவரைத் தோற்கடித்த பைடன் பெற்றதும் அதே 306 எலக்டோரல் வாக்குகள்தான். டிரம்பின் கோபம் தோல்வியினால் மட்டுமல்ல… வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். அமெரிக்கா தனது ஜனநாயகத்தைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தாலும் நிழல் ஆதிக்கம் ஒன்று அதனை மீறி ரகசியமாகச் செயல்பட்டு வருகிறது எனும் குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

கென்னடியின் படுகொலையிலும் அதே சக்திகள் ஈடுபட்டனர் என்பதும் பின்னாளில் அறியப் பட்ட ரகசியம். அமெரிக்காவின் ஜனநாயகம் அது விற்பனை செய்யும் ராணுவத் தளவாடங் களினாலேயே தாக்கப்படுகிறது என்பது நகை முரண். ஆயுத முனைகளில் பல்வேறு நாடுகளில் ”ஜனநாயகத்தை”, “அமைதியை” நிலைநாட்டுவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. பாகிஸ்தான், ஈராக், வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், கொரியா எனப் பல நாடுகளின் வரலாறு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையால் எழுதப்பட்டது. அதே பாணியில் உள்நாட்டிலும் டிரம்ப் செய்ய முயன்றுள்ளார். தான் தோல்வியை ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்டே தேர்தலைச் சந்தித்தார். அவர் சார்ந்த குடியரசுக்கட்சியும் டிரம்பைத் தவிர பொருத்தமான ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்த விரும்பவில்லை.

ஏன்? குடியரசுக் கட்சி எப்போதுமே கொஞ்சம் அதிரடி ரகம். ரீகன், புஷ், அவரது மகன் ஜார்ஜ் புஷ், டிரம்ப் ஆகியோரின் பதவிக்காலங்களில் அமெரிக்காவின் உலகளாவியக் கனவு நிறைவேறும் வாய்ப்புகள் இருந்தன. இப்போதும் உள்ளன: ஆனால் பைடன் அமெரிக்காவின் மேலாதிக் கத்தைத் திணிக்காமல் ராஜதந்திர ரீதியில் சமநிலைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுத விற்பனைகள் மந்தமாகும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மோதல்களில் அமெரிக்கா சமரசங்கள் செய்துக் கொள்ளலாம். இதெல்லாம் நிழல் ஆதிக்கத்தினர் விரும்பா தவை. எனவே முடிந்தவரை பைடனை எச்சரிக்கவே விரும்புகின்றனர். அமெரிக்க மக்களும், பைடனும் உண்மையான ஜனநாயகத்தை விரும்பினால் உலகளவில் சம வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பொருந்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சராசரி அமெரிக்கர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து இவற்றைச் செய்ய வேண்டாம். மேலாதிக்க முறைமைகளை கைக்கொள்ளாமல் இருந்தாலே உலகளவிலும், அமெரிக்கா விலும் அமைதியுடனான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தலாம். இதைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது. டிரம்ப் தொடர்ந்து பதவியில் 20 ஆம் தேதிவரை நீடிப்பாரா, மாட்டாரா என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் 20 ஆம் தேதிக்கு பிறகு நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும்.

error: Content is protected !!