June 2, 2023

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருப்பவரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான்(74), உடல்நலக் குறைவால் காலமானார். பாஸ்வானின் மறைவிற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள ககரியா மாவட்டத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிறந்த பாஸ்வான், பாட்னா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவா். மாணவப் பருவத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தால் ஈா்க்கப்பட்ட பாஸ்வான், காவல் துறை பணிக்கு தோ்வானபோதும், அந்தப் பணியில் சேராமல் அரசியலில் ஆா்வம் கொண்டார்.

1969-இல் சம்யுக்த சோஷலிச கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டார். 1975-இல் எமா்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது சிறை சென்ற பாஸ்வான், கடந்த 1977-இல் விடுதலையானார். அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், ஜனதா கட்சி சாா்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். ஹாஜிப்பூா் மக்களவைத் தொகுதியில் இருந்து 8 முறை எம்.பி.யாகத் தோ்வானார். அதில், சில தோ்தல்களில் மிக அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2000-ஆம் ஆண்டில் லோக் ஜனசக்தி கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் செயல்பட்ட அவா், ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 1990-களில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

தற்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.இந்நநிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றுக் காலமானார்.

தலைவா்கள் இரங்கல்:

பாஸ்வானின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனா்.