வாச்சாத்தி..ஓ, இதுதான் நீதியா?

வாச்சாத்தி..ஓ, இதுதான் நீதியா?

குற்ற செயல்கள் என்பது இரு வகை. எதிர்பாராமல் செய்வது. திட்டமிட்டு ஆணவத்துடன் செய்வது. இதில் இரண்டாவது வகை தான் வாச்சாத்தி கிராமத்தில் நடந்தேறிய பயங்கரம். தற்செயலான தனிமனித பயங்கரமல்ல, நம்ம யார் என்ன புடுங்கிவிடும் என்ற உச்சகட்ட எகத்தாளத்தோடு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதம். தமிழ் நாடு வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கேவலத்திலும் படு கேவலமான ஒன்று. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சரான காலகட்டத்தில் அதாவது 1992 ஆம் ஆண்டு, வனக்கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி வாச்சாத்தி என்ற மலையடி கிராமத்தையே அதிகார வர்க்கம் சூறையாடிய கொடூரமது.கிராமத்தினர் குற்றம் புரிந்தார்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த கிராமத்தினரையும் கைது செய்வது வீடுகளை தாக்குவது போன்றவை காவல்துறையை பொருத்தவரை புதிதல்ல. ஆனால் தர்மபுரி வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது தமிழ்நாடே அதுவரை காணாத முற்றிலும் நம்ப முடியாத அளவிலான அக்கிரமம். ஆண்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். பெண்களை விட்டு ஆண்களை துடைப்பத்தால் அடிக்க சொல்கிறார்கள். அதே பெண்களின் ஆடைகளை ஆண்களை விட்டு அவிழ்த்து கொடுமை படுத்துகிறார்கள்.

எல்லாவற்றையும் விட உச்சகட்டமாக 18 பெண்களை தனியாக பிரித்து ஒரு லாரியில் கொண்டு போய் ஒவ்வொரு பெண்ணையும் கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். பின்பு அலங்கோலமாய் கிடந்த பெண்களை ஏதோ குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது போல் கொட்டி விட்டு செல்கிறார்கள். இவ்வளவையும் செய்து விட்டு கிராமத்தினரை சிறையிலும் தள்ளுகிறார்கள். காவல்துறை வனத்துறை வருவாய்த்துறை என அதிகார வர்க்கத்தில் இருந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் இருந்தது ஒன்றே ஒன்றுதான். அதாவது, கிராம மக்களை என்ன செய்தாலும் நம்மை யார் என்ன புடுங்கிவிடும் என்ற ஒரே திமிர்த்தனம். எத்தனையோ போராட்டத்திற்குப் பிறகும் அப்போதைய தமிழக அரசு அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை.

கடைசியில் கொடூரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி உலகத்திற்கு தெரிய வந்து, விஷயம் மத்திய புலனாய்வு பிரிவுக்கு சென்ற பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த 255 பேர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவர்களுக்கு கீழ் நீதிமன்றம் பல்வேறு ரகங்களில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கிறது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தான் நேற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. 255 பேரில் 41 பேர் இறந்து விட்டதால் 215 பேருக்கு தண்டனையும் அபராதமும். கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என இந்த தீர்ப்பை பெறுவதற்கே 31 ஆண்டுகள் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் சென்றால் இன்னும் எவ்வளவு காலமாகுமோ தெரியவில்லை. ஒரு பக்கம் தாமதப்பட்ட நீதி கிட்டத்தட்ட அநீதிதான். இன்னொரு பக்கம் பயங்கரமான குற்றவாளிகளுக்கு கிடைத்திருக்கும் சொற்ப தண்டனை. வாச்சத்தியில் நடந்திருப்பது ஏதோ தனி மனிதன் உணர்ச்சி வசப்பட்டு தற்செயலாக நடத்தப்பட்ட பலாத்காரம் அல்ல. அரசு கொடுத்த அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று மமதையோடு கொத்துக்கொத்தாய் பெண்களை கூட்டாக மனித மிருகங்கள் நடத்திய வன்புணர்வு..பல்லாயிரம் படுகொலைகளுக்கு சமானமான கொடுங்குற்றம். இத்தகைய பலாத்கார குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் சிறை என்று கூட தண்டனை தரப்படவில்லை.

பயங்கரம் நடந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை என்றால், அவர்களுக்கு இப்போது என்ன வயதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். வழக்கு நடக்கும்போதே 41 பேர் இறக்கிறார்கள் என்றால், இப்போது தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர் முழுமையாய் தண்டனை அனுபவிக்கப் போகிறார்கள்? காலம் தாழ்ந்து தரப்படும் நீதியினால் கிடைக்கப் பெறப்போகும் பலன் இவ்வளவு தான். நீதி கிடைத்தது என்று சந்தோஷப்படுவதை விட, இப்படிப்பட்ட தாமதமான நீதியை தரக்கூடிய நடைமுறைகளை எவ்வளவு நாள் நாம் இந்த நாட்டில் தூக்கி சுமந்து கொண்டு இருக்க போகிறோம் என்பதுதான் வாச்சாத்தி விவகாரம் எழுப்பும் ஒரே கேள்வி?

ஆட்சியாளர்கள் ரீதியாக இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். எந்த ஆட்சியாளரும், அதிகாரத்தின் இரும்பு கரத்தைக் கொண்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுங்கள் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் என்றெல்லாம் உத்தரவிடுவதில்லை. ஆனால் அதைவிட கொடூரமாக அவர்கள் செய்வது, அதிகார வர்க்கம் தன்னிச்சையாக குற்றம் செய்திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் செல்லப்பிள்ளை போல் பாதுகாக்க துடிப்பதுதான். குற்றம் செய் என்ற உத்தரவை விட கொடூரமான நடவடிக்கை இவை. ஜெயலலிதா அரசும் அப்போது அந்த கொடுமையைதான் செய்தது.

வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் ஏதோ வாச்சாத்தி கிராம மக்கள் தான் அயோக்கியர்கள் போலவும் வன குற்றங்களை தடுக்கப் போன அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் அடித்து துன்புறுத்தினார்கள் என்பது போலவும் பிளேட்டையே மாற்றி போட்டு கொடூரங்களையெல்லாம் மூடி மறைக்கப் பார்த்தார்.. ஒரு பெண் முதலமைச்சராக இருந்தபோதுதான், 18 பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம், ஏதோ ஒரு காபி டம்ளர் தற்செயலாக கை தவறி விழுந்து விட்டது போல சர்வ சாதாரணமாக பாவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா செங்கோட்டையன் போன்றவர்கள் நடந்து கொண்டதெல்லாம், இப்போதைய மற்றும் வருங்கால ஆட்சியாளர்களுக்கு, எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கான பாடம். அரசு வர்க்கத்தின் தவறுகளை மூடி மறைக்க போனால் வரலாற்றில் காரி துப்பப்படும் பக்கங்களும் நமக்காக உருவாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!