யு.பி.ஐ சேவை முடங்கியதா? இதோ விளக்கம்!
இன்று 2025 ஏப்ரல் 12 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 11 மணி முதல், யுபிஐ (UPI) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் முடங்கின. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பிரபலமான யுபிஐ செயலிகள் செயலிழந்ததால், மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். இந்த முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐயை நம்பியிருக்கும் ஏராளமான மக்களை வெகுவாக பாதித்தது. இந்தச் சூழ்நிலையில், யுபிஐ சேவையை பயன்படுத்தும் பயனர்கள், பண பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொள்வதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துவது நல்லது
அதே சமயம் NPCI (National Payments Corporation of India) தரப்பில், “தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தன, இப்போது சரி செய்யப்பட்டு வருகிறது” என்று X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் செய்ய வேண்டியவை:
பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்கவும்: உங்கள் யு.பி.ஐ ஆப்-இல் (Google Pay, PhonePe, Paytm, முதலியவை) பரிவர்த்தனை வரலாற்றைப் பார்க்கவும்.
பரிவர்த்தனை “நிலுவையில்” (Pending) இருந்தால், 48 மணி நேரம் காத்திருக்கவும்.
மீண்டும் முயற்சிக்க வேண்டாம்: ஒரே பரிவர்த்தனையை பலமுறை முயற்சிப்பது மோசடி தடுப்பு நடவடிக்கைகளைத் தூண்டலாம்.
மாற்று வழிகள்: டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
வங்கியைத் தொடர்பு கொள்ளவும்: 5-7 நாட்களுக்குப் பிறகும் பணம் திரும்ப வரவில்லை என்றால், உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அணுகவும்.

முக்கிய குறிப்பு:
ஏப்ரல் 1, 2025 முதல், செயல்படாத அல்லது மறு-ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ ஐடிகள் செயலிழக்கலாம். எனவே, உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம்.
சமூக ஊடகங்களில் “யு.பி.ஐ முழுமையாக முடக்கப்படுகிறது” என்று பரவும் தகவல்கள் பொய்யானவை என்று NPCI தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் தகவல் தேவைப்பட்டால், NPCI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.npci.org.in) அல்லது உங்கள் வங்கியை அணுகவும்


