இந்தியாவில் வேலையின்மை அதிகரிச்சுகிட்டே போகுதுங்கோ!

இந்தியாவில் வேலையின்மை அதிகரிச்சுகிட்டே போகுதுங்கோ!

எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் அடுத்தடுத்து வரும் தகவல்கள் எதுவும் சரியில்லை என்பது மட்டும் உண்மை. ஏற்கெனவே பண வீக்கம் அதிகரித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகும் சூழலில் நம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு உள்ளது.

முன்னரே இந்தியாவின் பொருளாதார நிலைமை மந்தமாக இருப்பதாகவும் ஜி.டி.பி. எனப்படும் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 8 புள்ளி 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் 9 புள்ளி 6 சதவீதமும், கிராமப் புறங்களில் 7 புள்ளி 8 சதவீதமும் உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவை ஒப்பிடும்போது 2 சதவீதம் வரை வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தேவை குறைந்தது, முதலீடு வீழ்ச்சி, ஜி.எஸ்.டி.யால் விலை உயர்வு போன்றவை வேலைவாய்ப்பில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நுகர்வு மற்றும் முதலீடு குறைந்தது போன்ற காரணங்களால் வருகிற மாதங்களில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தராவும் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. வரியால் சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களில் விலை அதிகரித்துள்ளதால் அமைப்புசாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழில்களிலும் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2018 ஆண்டில் 6 புள்ளி 1 சதவீத வேலை வாய்ப்பின்மை என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத நிலை என்றும் அது, தற்போது 8 சதவீதமாக அதிகரித்து இருப்பது நிலைமை மோசமடைந்துள்ளதை குறிப்பதாகவும் கோவிந்தராவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!