புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையுது! – உலக சுகாதார மையம் ஹேப்பி!

புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையுது! – உலக சுகாதார மையம் ஹேப்பி!

ஆக்டிவ் ஸ்மோக்கிங்’, ‘பாசிவ் ஸ்மோக்கிங்’, ‘தேர்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்’ எனப் புகைப்பழக்கம், நான்கு விநாடிக்கு ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது. வருடத்தில் எட்டு மில்லியன் மக்களை, உல கெங்கும் பலி எடுக்கும் இந்தப் புகையிலை, அவர்களில் பெண்கள், குழந்தைகள் என ஒரு மில்லியன் பேரை புகைக்காமலே மரணிக்க வைக்கிறது. ஆக, காய்ந்த புகையிலைச் செடிகளின் இலைகள், மனிதக் குலத்தை சருகுகளாக்கிவிடுகின்றன என்ற எச்சரிக்கையை புரிந்ததாலோ என்னவோ உலக அளவில் புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதர அமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிகரெட், பீடி, சுருட்டு, மெல்லக் கூடிய புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக குறையத் தொடங்கியுள்ளது.

புகையிலை பயன்படுத்தும் 4-இல் 3 பேர் ஆண்கள் என்ற நிலையில் அவா்களது எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது, புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் முக்கிய திருப்பு முனையாகும்.

புகையிலை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்தே குறைந்து வந்தாலும், ஆண்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 130 கோடிக்கும் மேலாக இருந்தது.

எனினும், கடந்த ஆண்டுக்குப் பிறகு புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு நீடித்தால், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையில் அடுத்த ஆண்டு 10 லட்சமும், 2025-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சமும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புகையில்லாத, நவீன இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோா் குறித்த புள்ளிவிவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. அவா்களைக் குறித்த புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு அறிக்கையில் இடம் பெறும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!