தமிழ் குரல் / AI Voice
ஆன்லைனில் அதிகளவு பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் இதில் முதலிடம் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டம், வடபொன்பரப்பி சார்பதிவு அலுவலகம் பெற்றுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த சார் பதிவு அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங் களில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் சிக்கல் இருந்தாலும், அதன்பிறகு தீர்க்கப்பட்டது. இதனால், ஆன்லைனில் பத்திர பதிவு நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில், ஆன்லைன் பத்திரபதிவை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படும் சார்பதிவாளர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட பதிவுத்துறை ஐ.ஜி. குமரகுருபரன் முடிவு செய்துள்ளார்.
அதிக அளவில் பத்திரம் பதிவு செய்த சார்பதிவு அலுவலகங்களில் ரேங்க் பட்டியலை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டம் வடபொன்பரப்பி சார்பதிவு அலுவலகம் முதல் இடம் பிடித்துள்ளது.
விருத்தாச்சலம் பதிவு மாவட்டம் சிறுபாக்கம் இரண்டாம் இடத்தையும்,
அரியலூர் பதிவு மாவட்டம் செந்துறை சார்பதிவு அலுவலகம் மூன்றாம் இடத்தையும்,
கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டம் நகலூர் நான்காவது இடத்தையும்,
விழுப்பரம் பதிவு மாவட்டம் அன்னியூர் 5வது இடத்தையும்,
சிதம்பரம் பதிவு மாவட்டம் மன்னார்குடி 6வது இடத்தையும்,
பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் பட்டுகோட்டை இணை 1ம் எண் சார்பதிவாளர் அலுவலகம் 7வது இடத்தையும்,
திண்டிவனம் பதிவு மாவட்டம் திண்டிவனம் இணை 2ம் எண் சார்பதிவு அலுவலம் 8வது இடத்தையும்,
மயிலாடுதுறை பதிவு மாவட்டம் மயிலாடுதுறை இணை 1ம் எண் சார்பதிவாளர் அலுவலகம் 9வது இடத்தையும்,
விருத்தாச்சலம் பதிவு மாவட்டம் கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
அதே நேரத்தில் குறைவான பத்திரம் பதிவாகியுள்ள விருதுநகர் பதிவு மாவட்டம் வத்திராயிருப்பு சார்பதிவு அலுவலகம் 525வது இடத்தையும்,
பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் கீரமங்கலம் சார்பதிவு அலுவலகம் 524வது இடத்தையும் பிடித்துள்ளது என பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

