முடிந்தது தேர்தல் : இனி ரியல் ரிசல்ட் மே 19 தான் என்றாலும் கருத்து கணிப்பு இன்னா சொல்லுது?
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கியவுடனே தலைவர்கள், பிரபலங்கள் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். தொடர்ந்து காலை 7.15 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வாக்கை செலுத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 63.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார். மேலும் தென் மாவட்டங்களில் மழை காரணமாக பாதிப்படைந்ததாலும் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும், 6 மணி வரை வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்பவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மாலை 5 மணி நிலவரபடி 75 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் குறைவான அளவே வாக்குப் பதிவு இருந்தது. தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதேபோல எடப்பாடியிலும் 85 சதவீதமும், பாப்பிரெட்டிப்பட்டியில் 83 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருந்தன.
இதனிடையே இந்தத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.
அதிமுக பெரும்பான்மை: டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு
அதிமுக – 139, திமுக – 78, பிற கட்சிகள் – 17.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: ஏபிபி கருத்துக்கணிப்பு
திமுக – 132, அதிமுக – 95, பாஜக – 1, பிற கட்சிகள்- 6.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95, திமுக கூட்டணிக்கு 132, பாஜகவுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
திமுக : 114 -118, அதிமுக: 95 – 99, பிற கட்சிகள் 27.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
திமுக: 124- 140, அதிமுக: 89 – 101, பிற கட்சிகள்: 4- 11
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 89- 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு
திமுக : 129 -151, அதிமுக: 81 – 99, பிற கட்சிகள்: 2 – 6
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 81- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட 5 கருத்துக்கணிப்புகளில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி, இந்தியா டுடே, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகிய நான்கு கருத்துக்கணிப்புகளிலும் திமுக பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரியல் ரிசல்ட் மே 19ம் தேதிதான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


