திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் : இனி ஓலைப்பெட்டியில் வழங்க முடிவு!

திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் : இனி ஓலைப்பெட்டியில் வழங்க முடிவு!

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கோயில் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டுதான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள். திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாகதிருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏழுமலையான் அருளுடன் மிகுந்த சுவையுடன் திருப்பதி லட்டு உள்ளது. ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. . கடந்த நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் 365 கோடி ரூபாய் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வருவாய் ஈட்டி உள்ளது. அதே சமயம் இந்த நிதியாண்டில் உண்டியல் வருவாய் ஆனது ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தேவஸ்தானம் எதிர்பார்த்துள்ளது. தற்போது லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது. ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அட்டை பெட்டிகளில் வழங்கப்பட்து. அதிலும் புகார்கள் எழுந்ததால் மீண்டும் பிளாஸ்டிக் கவர்களிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனிமேல் பனை ஓலையிலான பெட்டிகளில் லட்டு விற்பனை செய்ய தேவஸ்தான் முடிவு செய்துள்ளது.

அதற்காக, பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார். இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.

இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப்பெட்டிகளை கவுன்ட்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!