ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு  அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளி டப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் முன்னிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் நல பொறியாளர் பி.எஸ். லிவிங்ஸ்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி ஆகியோர் ஆலையின் பிரதான நுழைவு வாயிலை பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆலை தரப்பில் தலைமை பாதுகாப்பு அதிகாரி சுமித் பர்மன் உடனிருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை நகல் கேட்டில் ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென நீண்ட காலமாக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ( திங்கட்கிழமையன்று) துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செலவம் தூத்துக்குடி சென்று அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிட்டார். இதற்குப் பிறகு சென்னை திரும்பிய அவருடன், எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஸ்டெர்லைட் ஆணை தொடர்ந்து இயங்குவ தற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அதனைப் புதுப்பிக்க ஸ்டெர்லைட் விண்ணப்பித்ததாகவும் ஆனால், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் பூர்த்தி செய்யப் படவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

எனவே ஆலை இயங்குவதற்கான இசைவாணையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 9ஆம் தேதி நிராகரிக்கப் பட்டதாகவும், ஆலைக்கான மின்சார இணைப்பு மே 25ஆம் தேதியன்று துண்டிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், முதலமைச்சரையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்தித்து ஆலையை மூடக் கோரியதால் ஆலையை மூடுவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டிருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், “1974ஆம் வருடத்தின் தண்ணீர் சட்டத்தின்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும் அதனை மூடி சீல்வைக்க உத்தரவிடுவதாகவும்” தெரிவிக்கப் பட்டுள்ளது.இதையடுத்து, அந்த ஆலையின் வாயிலில் இந்த உத்தரவு ஒட்டப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “இது நிரந்தரமான மூடல் உத்தரவு. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் பொருட்கள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து முடிவுசெய்வார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “அந்த ஆலையை மூட அரசாணை வெளியிடும்படி போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கை கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது. ஆகவே பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் இந்த முடிவை ஆதரித்தாலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாகவே இதனைச் செய்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளன.

Related Posts

error: Content is protected !!