குறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு!

குறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு!

குறுவை சாகுபடிக்கு கர்நாடகம் தண்ணீர் தராத நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெற்றி விழா நடத்துவதா? என காவிரி உரிமை மீட்புக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்க தலைவருமான மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி என்னும் தலைப்பில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாது. எனவே, நிலத்தடி நீர்ப்பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும்

மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் கடந்த 9-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கிடையே 9 நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக அவருக்கு வெற்றி விழா? மேலாண்மை ஆணையத்துக்கு நியமிக்க வேண்டிய உறுப்பினர்களை கர்நாடகா இதுவரை நியமிக்காமல் இருப்பதும், ஆணைய கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும், திட்டமிட்டு தமிழகத்தை பழிவாங்குகிறது என்பதற்கு சான்றாகும்.

மத்திய அரசின் இந்த பழிவாங்கலுக்கு, துணை போகிறது தமிழக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற்று ஜூன் மாதத்துக்குரிய 9 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருந்தால் அதற்காக ஆளுங்கட்சி வெற்றி விழா கொண்டாடலாம். முதல்வர் பழனிசாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியை தானே ஒத்துகொள்ளும் வகையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு இப்போது காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. கர்நாடகத்தின் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன. கிருஷ்ண ராஜ சாகர் அணையும் நிரம்ப போகிறது.

எனவே, மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இதற்குமேல் கர்நாடகத்துக்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது?

தமிழக முதல்வர் பழனிசாமி உருப்படியான நடவடிக்கை எடுத்தால் மக்கள் பாராட்டுவார்கள்.

இவ்வாறு, மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!